சென்னை | நீரில் மூழ்கடித்து இளைஞர் கொலை: 4 மாதங்களுக்கு பிறகு ரவுடி கைது


சென்னை: சென்னை கீழ்க்கட்டளை ஏரியில் கடந்த 12.04.2024 அன்று25 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலத்தை மடிப்பாக்கம் போலீஸார், தீயணைப்புப் படை வீரர்கள் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், மடிப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த நபர், கீழ்க்கட்டளை, தேன்மொழி நகரைச் சேர்ந்த சிவா என்ற மொட்டைசிவா (24) என்பது தெரியவந்தது. இந்நிலையில், சிவாவின்மனைவி சிவரஞ்சனி, மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் 4 மாதங்களுக்குப் பிறகு புகார் மனு அளித்தார்.

அதில், ``எனது கணவர் 10.04.2024 அன்று இரவு, நண்பர்கள் சிலருடன்வெளியே சென்றார். அதன் பிறகு 2 நாட்களுக்கு பிறகுதான்அவர் கீழ்க்கட்டளை ஏரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கணவருக்கு நீச்சல் தெரியும். அவர் கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டிருக்கலாம்’’ என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து போலீஸார் சந்தேகத்தின்பேரில் கீழ்க்கட்டளை தேன்மொழி நகரைச் சேர்ந்த சுந்தர்ராஜா (27) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். அதில், திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

சம்பவத்தன்று சிவா மது அருந்திக் கொண்டிருந்தபோது, அந்த வழியாகச் சென்ற சுந்தர்ராஜாவிடம், ‘அவசரமாக நண்பர் ஒருவரை அழைக்க வேண்டும்’ என்று கூறி செல்போனைவாங்கி சிவா பேசியுள்ளார். பின்னர் செல்போனை திருப்பிக் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால், இருவருக்கும் இடையேவாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த சுந்தர்ராஜா,சிவாவின் தலையை நீரில் மூழ்க வைத்து கொலை செய்துவிட்டு சடலத்தை ஏரியில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். இவ்வாறு சிவாவை கொலை செய்ததை சுந்தர்ராஜா வாக்குமூலமாகக் கொடுத்துள்ளதாக போலீஸார் தெரிவித் தனர்.

இதையடுத்து, சுந்தர்ராஜா நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். 4 மாதங்களுக்குப் பிறகு சந்தேக மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. ரவுடியான சுந்தர்ராஜா மீது 5 குற்ற வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

x