`எனக்கு அவசரமாக சில்லறைத் தேவை'- யாசக தம்பதியை ஏமாற்றி பணத்தை பறித்துச்சென்ற மர்மநபர்


தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் யாசகம் எடுப்போரை நூதனமுறையில் ஏமாற்றி அவர்களிடம் இருந்து பணத்தை மர்மநபர் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பகுதியில் ஒரு வயோதிக தம்பதியினர் தினமும் யாசகம் எடுத்து வருகின்றனர். அவர்கள் யாசகம் பெற்றத் தொகையை உடன்குடி பகுதியில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் இருந்து எண்ணிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக டூவிலரில் ஒரு டிப் டாப் ஆசாமி வந்தார்.

அவர், அந்த யாசகத் தம்பதியிடம் சில்லறை காசுகளாக எவ்வளவு வைத்திருக்கிறீர்கள். எனக்கு அவசரமாக சில்லறை தேவை எனக் கேட்டார். தம்பதிகள் தங்களிடம் 1055 ரூபாய் இருப்பதாகச் சொன்னார்கள். உடனே டூவிலரில் வந்தவர், என் கையில் கருப்பட்டி பெட்டி உள்ளது. இதன் மதிப்பு 3000 ரூபாய். இது இங்கே இருக்கட்டும். நான் சில்லறைக் காசுக்கு இணையான பணத்தை வீட்டில் போய் எடுத்து வருகிறேன் எனச் சொல்லிச் சென்றார். ஆனால் அதன்பின்பு அவர் திரும்ப வரவே இல்லை.

நீண்ட நேரம் காத்திருந்த யாசக தம்பதி அவர் கொடுத்த கருப்பட்டி பெட்டியைத் திறந்து பார்த்தனர். அதில் முழுக்க கல்லும், கழிவுகளுமே இருந்தன. எதிர்ப்பதற்கே திராணியற்ற விளிம்புநிலை யாசகர்களை பைக்கில் வந்து மர்மநபர் ஏமாற்றிய சம்பவம் உடன்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x