பாஜக தலைவர்கள் மீது அமலாக்கத்துறை பாயாது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு, அமர் முல்சந்தனி மீதான நடவடிக்கை மூலம் மத்திய விசாரணை அமைப்பு பதிலடி தந்திருக்கிறது.
அமர் முல்சந்தனி காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவியவர். கூட்டுறவு வங்கி ஒன்று திவாலாவதற்கு காரணமான வகையில், வழக்குகளில் இருந்து தப்பிக்க 2016-ல் பாஜகவுக்கு தாவல் மேற்கொண்டார். ஆனால், அவர் இழைத்த பண மோசடிகள் பாம்பு போல காலைச் சுற்றியதில், கைதாகி அமலாக்கத்துறை தீவிர விசாரணைக்கு ஆட்பட்டுள்ளார்.
புனேவை சேர்ந்த சேவா விகாஸ் கூட்டுறவு வங்கியை கிட்டத்தட்ட தனது குடும்ப சொத்து போல பாவித்திருந்தார் அமர் முல்சந்தனி. தனது குடும்ப உறுப்பினர்களையே வங்கியின் போர்டு உறுப்பினர்களாக்கி, அதன் தலைவராக தான் வைத்ததே சட்டமாக மாற்றி அட்டூழியம் செய்து வந்தார்.
மோசடி நிறுவனங்களுக்கு கடன்களை வாரி வழங்கியதில், ஆயிரக்கணக்கான சிறு முதலீட்டாளர்களின் சேமிப்பை காணடித்தார். முறைகேடான கடன்களுக்கு 20 சதவீதம் வரை கமிஷன் பெற்று, அவை மூலம் கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கிக் குவித்தார். அமரின் குட்டுகள் வெளிப்பட்டதும், சேவா விகாஸ் வங்கிக்கான உரிமத்தை ரிசர்வ் வங்கி நீக்கியது. ஆனபோதும் ரூ426 கோடிக்கான பண மோசடிகள் காரணமாக, அமர் மீது வழக்குகள் பாய்ந்தன.
காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்குத் தாவிய சில வருடங்கள் பாதுகாப்பாக இருந்தார். ஆனால் அமர் அடித்த கொள்ளை கொஞ்சம் நஞ்சமல்ல என்பதால், கடைசியில் பாஜக தலைமையும் அவரை கைவிட்டது. அமர் குடும்பத்துக்கு சொந்தமான ரூ122 கோடிக்கான சொத்துக்களை மே மாதம் முடக்கிய அமலாக்கத்துறை, ஜூலை 1 அன்று அமர் முல்சந்தனியை கைது செய்தது.
தற்போது அமர் வழக்கை விசாரித்து வரும் மும்பை சிறப்பு நீதிமன்றம், அவருக்கான அமலாக்கத்துறை கஸ்டடியை ஜூலை 7 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
பாஜகவை சலவை எந்திரம் என்றும், பாஜகவுக்கு கட்சி மாறுவோர் மீதான ஊழல் கறைகள் கழுவிக் களையப்படும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் சூழலில், அவற்றுக்கு மாறாக பாஜக தலைவர் அமர் மீதான அமலாக்கத்துறையின் விசாரணை வளையம் அரிதாக இறுகி வருகிறது.