புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட இருவரும் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்


புதுச்சேரி: மார்ச் மாதம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் முதல்முறையாக போக்சோ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் 2-ம் தேதி மாயமானார். 3 நாட்கள் கழித்து, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாய்க்காலில் மீட்கப்பட்டது. இச்சம்பவம் நாடு முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து பொதுமக்கள் தன்னெழுச்சியாக பல இடங்களில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த முத்தியால்பேட்டை போலீஸார், சோலை நகர் கருணாஸ்(19) விவேகானந்தன்(57)ஆகிய இருவரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை தரப்படும் என்று அப்போதைய ஆளுநர் தமிழிசை அறிவித்தார். ஆனால், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் தாமதமானது.

இந்த நிலையில், மே மாதம் 6-ம் தேதி 80 சாட்சிகளுடன், 500 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகை தாக்கலாகி நூறு நாட்களுக்குப் பிறகு இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் முதல்முறையாக புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்துக்கு இன்று சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டனர்.

போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி முன் அவர்களை போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது, குற்றப்பத்திரிகை குற்றம்சாட்டப் பட்டோருக்கு அளிக்கப்பட்டதா உள்ளிட்ட விவரங்களை நீதிபதி உறுதி செய்துகொண்டார். அதன்பிறகு இருவரும் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

x