கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்த வழக்கில் ஏற்கெனவே 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும், தலைமறைவாக இருந்த ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
பர்கூர் அருகே தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு நடந்த பாலியல் தொல்லை தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று 5-வது நாளாக விசாரணை நடத்தினர்.
இவ்வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான சிவராமன் உயிரிழந்தார். இதனிடையே, இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமராஜ் நகரைச் சேர்ந்த சுதாகர் (44) என்பவரை கைது செய்தனர்.
பள்ளி இன்று திறப்பு: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை நடந்த பர்கூர் அருகே தனியார் பள்ளி கடந்த ஒரு வாரமாக விடுமுறை விடப்பட்டிருந்தது. இப்பள்ளியைத் திறப்பது தொடர்பாக பள்ளியை ஆய்வு செய்த அதிகாரிகள் குழுவினர், மாணவர்களின் பெற்றோரிடம் கருத்துக்கள் கேட்டறிந்தனர். அப்போது, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சில கோரிக்கைகளை வைத்தனர்.
அதன் அடிப்படையில் பள்ளி முழுவதும் 38 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று (27-ம் தேதி) முதல் பள்ளியைத் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி வழக்கு: இதேபோல, கடந்த ஜனவரியில் கிருஷ்ணகிரி அருகே மற்றொரு பள்ளியில் நடந்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 9-ம் வகுப்பு மாணவி கொடுத்த புகாரைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வந்தனர்.