டிஜிட்டல் தரவுகள், ஆவணங்கள் பறிமுதல்! அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் 4வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!


அமைச்சர் எ.வ.வேலு

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

தொடரும் சோதனை

பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, கல்வி, தொழில் நிறுவனங்கள் மூலம் ஈட்டும் வருவாய்க்கு முறையான கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில், சென்னை, திருவண்ணாமலை, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில், அவருக்குச் சொந்தமான இடங்கள், நெருக்கமானவர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர்.

திருவண்ணாமலையில் அமைச்சரின் வீடு, கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளை அலுவலகம், கிரானைட் குவாரி, நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரரான அருணை கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் வெங்கட் என்பவரது வீடு மற்றும் அலுவலகம், அமைச்சரின் மகன் கம்பன் வீடு உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்ட இடங்களில் 3-வது நாளாக நேற்று சோதனை நடைபெற்றது.

இதில், பல்வேறு டிஜிட்டல் தரவுகள், வங்கிப் பணப் பரிமாற்றம், கோப்புகள் ஆகியவற்றைக் கைப்பற்றிய அதிகாரிகள், அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் கம்பன் மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர் வெங்கட் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 4-வது நாளாக இன்றும் சோதனைகள் நடைபெற்று வருகிறது. சென்னை, கரூர், கோவை உட்பட 40 இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகிறது. சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகே முழு விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் மணல் மற்றும் கிரானைட் குவாரிகளில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனைகளில் கிடைத்த தகவல், ஆவணங்கள் அடிப்படையிலேயே, பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், தனியார் கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் நடக்கும் ஐ.டி. சோதனைகளுக்கும், அமைச்சர் எ.வ.வேலுவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அமைச்சரின் வழக்கறிஞர் விளக்கமளித்துள்ளார்.

x