கொடைரோடு அருகே கள்ளநோட்டு தயாரிக்கும் கும்பல் கைது - வேன் பறிமுதல்


திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டு கும்பல் வந்த வாகனம்.

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே கள்ளநோட்டு தயாரிக்கும் கும்பலை இன்று அதிகாலையில் ரோந்து சென்ற போலீஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரமும் ரூ.26,500 கள்ளநோட்டுகள் மற்றும் வேனை பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாகையகவுண்டம்பட்டி பிரிவு அருகே இன்று அதிகாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் கார் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக ரோந்து சென்ற அம்மையநாயக்கனூர் போலீஸார் அந்தக் காரைச் சோதனையிட்டனர். அதில் 100 ரூபாய் கள்ள நோட்டுக்கள் ரூ.26,500 மதிப்பில் இருந்துள்ளது. மேலும் கலர் ஜெராக்ஸ் இயந்திரம் ஒன்றும் வண்டியில் இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த போலீஸார் காரில் இருந்தவர்களை பிடித்தனர். அப்போது அதில் ஒருவர் தப்பியோடிவிட்டார். காருக்குள் எஞ்சி இருந்த ஒரு குழந்தை உள்ளிட்ட எட்டு பேரை போலீஸார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், காரில் இருந்தது விருதுநகர் மாவட்டம் காந்திநகரைச் சேர்ந்த அழகர் (28), மதுரை கூடல் புதூரைச் சேர்ந்த ராஜா (27), சபரி ராஜ் (18), முருகேசன் (30), சுர்ஜித் அமர்நாத் (17), மதுரை வளையங்குளத்தைச் சேர்ந்த சிவமணி என்ற மணிகண்டன் (26), அவரது மனைவி ஜெனித்தா (24), அவர்களது நான்கு வயது குழந்தை மற்றும் மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த ரவி (64) ஆகியோர் என தெரியவந்தது.

போலீஸாரிடம் இருந்து தப்பி ஓடியது கோட்டைச்சாமி (31) என்பதும் தெரியவந்தது, இவர்கள் அனைவரும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள ரவி (64) என்பவரின் வீட்டிலிருந்த கள்ளநோட்டு தயாரிக்கும் மிஷினை எடுத்துக் கொண்டு ரவியுடன் விருதுநகர் சென்று கள்ளநோட்டு தயாரிக்க சென்றதாக விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக 10 பேர் மீதும் அம்மையநாயக்கனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

x