துணை முதல்வர் மீது சொத்துக் குவிப்பு... லோக் ஆயுக்தா அதிரடி!


கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார்

கர்நாடக மாநிலத்தில் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மீது அம்மாநில லோக் ஆயுக்தா போலீஸார் சொத்துக் குவிப்பு வழக்கை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லோக் ஆயுக்தா

கர்நாடக காங்கிரஸ் தலைவரும், அம்மாநில துணை முதல்வருமான டி.கே.சிவகுமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த பாஜக ஆட்சி நடந்தபோது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் கணக்கில் வராத‌ ரூ.74 கோடி மதிப்பிலான சொத்துக்களின் ஆவணங்கள் சிக்கின. இது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்த நிலையில், 2020-ம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்ற‌ப்பட்டது. அதன்பேரில் டி.கே.சிவகுமார் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்ட‌து.

சிபிஐ விசாரித்து வந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் சி.பி.ஐ., தனக்கு எதிராக தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

சிவக்குமார்

மேலும், இந்த வழக்கில் சிபிஐ 3 மாதத்தில் விசாரணையை நிறைவு செய்யவும், ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியும் உத்தரவிட்டது. இதனால் சிபிஐ வழக்கை விரைவுபடுத்தியது. ஆனால் அதற்கு தடை போடும் வகையில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மீதான சிபிஐ விசாரணையை அம்மாநில அரசு முன் வாபஸ் பெற்றது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.சோமசேகர் மற்றும் உமேஷ் எம் அடிகா விசாரித்தனர்.

அப்போது, லோக் ஆயுக்தா தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் வெங்கடேஷ் அரபட்டி, இந்த வழக்கில் பிரதிவாதியாக தன்னையும் சேர்த்துக்கொள்ளக்கோரி மனு தாக்கல் செய்தார். அதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில் இந்த வழக்கில் அடுத்த கட்டமாக கர்நாடக மாநில லோக் ஆயுக்தா போலீஸ், டி.கே.சிவகுமார் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். ஆனால் இது வழக்கை திசை திருப்பும் முயற்சி என பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

x