பெண்ணின் உள்ளாடை காணாமல் போன விவகாரத்தில் குடியிருப்பில் மூண்டது கலவரம்: 10 பேர் படுகாயம்; 20 பேர் கைது


உள்ளாடை திருட்டு

குஜராத்தில் பெண் ஒருவரின் உள்ளாடைகள் தொடர் திருடு போனது தொடர்பாக எழுந்த சச்சரவு, இருதரப்பினர் இடையே கலவரம் போல வெடித்ததில் 10 பேர் படுகாயமடைந்தனர்; 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலம் தந்துகா நகரின் குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் பெண் ஒருவருக்கு விநோத பிரச்சினை எழுந்தது. அவரது உள்ளாடைகளை துவைத்து காயப்போட்டால் அவை வீடு திரும்புவதில்லை. காயப்போட்ட சில நிமிடங்களில் அவை காணாமல் போவது மாதக்கணக்கில் தொடர்ந்தது.

இப்படியே 7 மாதங்கள் கழிந்ததில், உள்ளாடைகளை மட்டும் குறிவைத்து எவரோ களவாடுகிறார்கள் என்பதை அந்த பெண் புரிந்துகொண்டார். உள்ளாடை கள்வனை பொறி வைத்துப் பிடிக்க முடிவு செய்தார். அதன்படி செல்போனை ஏரோபிளேன் மோடில் வைத்து, கேமராவை ஆன் செய்தார். மொட்டை மாடியில் உள்ளாடைகள் காயும் இடத்துக்கு நேராக கேமரா கண்கள் நோக்குமாறு செல்போனை ஒளித்து வைத்தார்.

அன்றைய தினமும் அவர் எதிர்பார்த்தவாறே உள்ளாடைகள் காணாமல் போனது. உள்ளாடைக் கள்வனை அறிந்து கொள்ளும் ஆவலில் மறைத்து வைத்த செல்போன் பதிவுகளை எடுத்து சோதித்துப் பார்த்தார். அதில் கனவான் ஒருவர், உயிரைப் பணயம் வைத்து மொட்டை மாடிகளை தாண்டி வந்து தனது உள்ளாடைகளை திருடிச் சென்றதை கண்டுகொண்டார். அவர் அசப்பில் பக்கத்து வீட்டுக்காரர் போலவே தென்பட்டார்.

அவ்வளவுதான், கையும் உள்ளாடையுமாக வீடியோ ஆதாரத்தோடு கள்வன் அகப்பட்டதில், 8 மாதங்களாக தொடர் திருட்டுக்கு ஆளான பெண்மணி கோபத்தில் பொங்கியெழுந்தார். உடனே வீதியில் திரண்டு பக்கத்து வீட்டுக்காரரை ஒரண்டை இழுத்தார். இதற்கென்றே காத்திருந்தார்போல ஏரியா நியாயவான்கள் பலர், இருபக்கமும் அணி திரண்டு நின்று வாய்ச்சண்டையில் சூடுபரத்தினார்கள்.

அந்திப்பொழுதில் எடுத்த வீடியோவில், நிழலாக தெரிந்த உருவம் நானில்லை என பக்கத்து வீட்டு கனவான் சாதித்தார். 7 மாதமாக உள்ளாடைகளை பறிகொடுத்த பெண்மணியோ நாராசமாய் வெடித்து தீர்த்தார். இருதரப்பிலும் மேலும் ஆட்கள் திரண்டதாலும், வாய்த்தகராறு கைகள் மற்றும் கையில் சிக்கிய பொருட்கள் எனத் தாவியதிலும், குடியிருப்பில் கலவரத்துக்கு ஒப்பான சூழல் எழுந்தது.

போலீசாருக்கு தகவல் சென்று அவர்கள் விரைந்து வருவதற்குள், பலரின் மண்டைகள் உடைந்திருந்தன. அடிதடியில் அவ்வாறு காயமடைந்தவர்களில் 10 பேர் மருத்துவமனையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருதரப்பையும் சேர்ந்த 20 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

x