தனியார் தங்கும் விடுதியில் பாலியல் தொழில்; மேலாளர் கைது: உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு!


பாலியல் தொழில்

சிவகங்கையில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய விடுதி மேலாளாரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான விடுதி உரிமையாளரை தேடி வருகின்றனர்.

மாவட்ட தலைநகரான சிவகங்கையில், அரண்மனை வாசல் பகுதியில் சில தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. இங்குள்ள சலீம் தங்கும் விடுதியில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வருவதாக, சக்கந்தி மேலத்தெருவை சேர்ந்த மாதவன் என்பவர் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இதனை தொடர்ந்து சலீம் தங்கும் விடுதியில் சிவகங்கை நகர் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதியானது. இதையடுத்து தனியார் தங்கும் விடுதியின் உரிமையாளர் கபீர் முகமது, மேலாளர் செல்வராஜ் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

தங்கும் விடுதி மேலாளர் செல்வராஜை போலீஸார் கைது செய்த நிலையில் தலைமறைவான கபீர் முகம்மதுவை தேடி வருகின்றனர்.

x