ரகசியத்தை சொல்லப்போகிறேன்; மிரட்டிய ஆட்டோ டிரைவரை ஓடஓட வெட்டிக்கொன்ற ரவுடிகள்: சென்னையில் பயங்கரம்


சென்னையில் சூப்பர் மார்கெட்டில் புகுந்து ஆட்டோ ஓட்டுநரை ரவுடிகள் வெட்டி படுகொலை செய்தனர். எதிர் கேங்கில் சேரப்போவதாக கூறியதால் இந்த கொலை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை வேளச்சேரி நேருநகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தினேஷ் என்ற வெறி தினேஷ்(24). திருமணமாகாத இவர், நேற்று இரவு கிண்டி மடுவாங்கரை பகுதி வழியாக சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் திடீரென பட்டாக்கத்தியுடன் தினேஷை ஓட ஓட விரட்டி சென்றனர். உயிருக்கு பயந்து தினேஷ் கிண்டி வண்டிக்காரன் தெருவில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடைக்குள் ஓடி ஒளிந்தார். அவரை பின் தொடர்ந்து வந்த கும்பல் கடைக்குள் புகுந்து ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி வெளியே துரத்தினர். உடனே வெளியே ஓடி வந்த கடை உரிமையாளர் கடையின் ஷட்டரை மூடி பூட்டிவிட்டு கிண்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதற்குள் அந்த கும்பல் கடையில் வைத்து தினேஷை சரமாரி வெட்டிக் கொலை செய்தது. மேலும் கடை வெளியே பூட்டப்பட்டதால் கொலையாளிகள் வெளியே தப்பிச் செல்ல முடியாமல் கடைக்குள் சிக்கிக்கொண்டது. பின்னர் கிண்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த தினேஷ் உடலை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்து விட்டு கத்தியுடன் கூலாக அமர்ந்திருந்த ஆதம்பாக்கத்தை சேர்ந்த சீசி மணிவண்ணன்(30), பள்ளிக்கரணையை சேர்ந்த ஊசி உதய்(28) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. ஆதம்பாக்கம் பகுதியில் ரவுடி நாகூர் மீரான் கோஷ்டிக்கும், ரவுடி ராபின்சன் கோஷ்டிக்கும் இடையே யார் தாதா என்ற பிரச்சினையில் அவ்வப்போது கொலை, அடிதடி போன்ற சம்பவங்கள் அரங்கேறி வந்துள்ளது. கடந்தாண்டு இதே பிரச்சினையில் ரவுடி நாகூர் மீரானை ராபின்சன் கோஷ்டியினர் கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் ராபின்சன், சீசி மணிவண்ணன், உதய் உட்பட பலரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து நாகூர்மீரான் கூட்டாளிகள் பழிக்குப்பழிவாங்க ரவுடி ராபின்சனை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அதன் தொடர்ச்சியாக கடந்த செப்டம்பர் மாதம் நாகூர்மீரான் கோஷ்டியினர் ராபின்சனின் தங்கையின் காதலனை கடத்திச் சென்றனர். அப்போது, ராபின்சன் இருக்கும் இடத்தை கேட்டு அவருக்கு தொந்தரவு கொடுத்ததுடன், நாட்டு வெடிகுண்டு வீசி அங்கிருந்த வாகனத்தை சேதப்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், ராபின்சன் கேங்கில் இருந்த தினேஷ் மற்றும் குணா இருவரும் நாகூர்மீரான் கேங்கில் சேர்ந்து அப்ரூவராகி ரகசியத்தை தெரிவிக்க இருந்தனர். இந்த தகவல் சிறையில் உள்ள ராபின்சனுக்கு தகவல் தெரியவந்துள்ளது. அப்போது, நாகூர்மீரான் கேங்கில் சேர வேண்டாம் என பலமுறை தினேஷ், குணாவை எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை. இந்தநிலையில் ராபின்சன் கூட்டாளியான சீசி மணிவண்ணன் மற்றும் ஊசி உதய் நேற்று மாலை சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்துள்ளனர். பின்னர் இவர்கள் நேராக வேளச்சேரி சென்று தினேஷை கொலை செய்ய முயன்றுள்ளனர். அப்போது தினேஷ் கடைக்குள் ஓடி ஒளிந்து கொள்ள அவரை விடாமல் விரட்டி சென்று கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜாமீனில் வெளியே வந்த ரவுடிகள் ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்துவிட்டு மீண்டும் சிறைக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x