பெரியகுளம்: பெரியகுளத்தில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த 29 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. அவற்றை செயலிழக்கச் செய்த போலீஸார், இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை காடுவெட்டி பகுதியில் மா, புளியந்தோப்புகள் அதிகம் உள்ளன. இந்நிலையில் இங்குள்ள புளியந்தோப்புகளில் நாட்டு வெடிகுண்டுகள் அதிகளவில் இருப்பதாக விவசாயிகள் பாதுகாப்பு கிராம காவல் குழுவுக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் கிராம காவல் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அப்போது அங்குள்ள புளியந்தோப்புகளின் பல இடங்களில் நாட்டு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இவர்களைப் பார்த்ததும் அங்கு இருந்த இரண்டு பேர் தப்பியோட முயன்றனர். அதில் ஒருவர் பிடிபட்டார். விசாரணையில், அவர் பெரியகுளம் அருகே உள்ள ஏ.வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (30) என்பதும், தப்பியோடியவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (36) என்பதும் தெரிய வந்தது. தகவலின் பேரில் வடகரை போலீஸார் நேரில் வந்து ஆய்வு செய்தனர். அப்போது, புளியந்தோப்பில் 29 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பது தெரியவந்தது.
விலங்குளை வேட்டையாடுவதற்காக வைத்திருந்ததாக சிவகுமார் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து நாட்டு வெடிகுண்டுகளை பாதுகாப்பாக மீட்ட போலீஸார், அவற்றை செயலிழக்கச் செய்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், சிவகுமாரை கைது செய்ததுடன் தப்பியோடிய ஆனந்த ராஜை தேடி வருகின்றனர். நாட்டு வெடிகுண்டுகள் எங்கிருந்து பெறப்பட்டது. சமூக விரோத செயல்களில் ஈடுபட இவர்கள் திட்டம் தீட்டியுள்ளார்களா என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.