கேரள லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு வென்ற வடமாநிலத் தொழிலாளி தன் நண்பர்களால் உயிருக்கு ஆபத்து என போலீஸில் தஞ்சம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் அரசே லாட்டரிச்சீட்டு நடத்துகிறது. இந்நிலையில் இந்த லாட்டரி சீட்டை வாங்கிய மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிர்சு என்பவருக்கு அதில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்தது. இதில் வருமான வரிப்பிடித்தம் போக, அவருக்கு 65 லட்சம் கிடைக்கும். இதை வாங்குவதற்கு கேரள லாட்டரி அசோசியேசனுக்குப் போய் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆனால் பிர்சுவும், அவரது சில நண்பர்களும் சேர்ந்து திருவனந்தபுரம், தம்பானூர் காவல் நிலையத்திற்கு கும்பலாக வந்தனர். அப்போது பிர்சு," எனக்கு லாட்டரிச் சீட்டு வாங்கியதில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்து உள்ளது. இதனால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த லாட்டரிச் சீட்டை என்னிடம் இருந்து அபகரிக்க பலரும் முயல்கின்றனர். என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்”எனக் கதறி அழுதார்.
ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்தும், வடமாநிலத் தொழிலாளி அழுது கொண்டே காவல் நிலையம் ஓடிவந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீஸார் அவருக்கு ஆறுதல் சொல்லி, பிரச்சினை என்றால் தங்களை அணுகுமாறு வலியுறுத்தி அனுப்பி வைத்தனர்.