பக்ரீத் தொழுகையை பயன்படுத்தி 17 பயங்கரவாதிகள் சிறையிலிருந்து தப்பியோட்டம்


பக்ரீத் தொழுகை

பக்ரீத் கூட்டு தொழுகையை பயன்படுத்தி சிறையிலிருந்து தப்பித்த 17 பயங்கரவாதிகளால் பாகிஸ்தானில் பதட்டம் எழுந்துள்ளது.

தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை இஸ்லாமிய மக்கள் மத்தியில் உவலையுடன் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சிறப்பு தொழுகை நிகழ்வுகளும் நடத்தப்பட்டன. அப்படியான கூட்டு தொழுகை நிகழ்வை பயன்படுத்தி பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மகாண சிறை ஒன்றிலிருந்து பயங்கரவாதிகள் தப்பியோடி உள்ளனர்.

பலுச்சிஸ்தான் மகாணத்தில் இருக்கும் சாமன் சிறையில், பண்டிகைக்கான ஈத்-அல்-அதா தொழுகைக்கு சிறை நிர்வாகத்தினர் நேற்று ஏற்பாடு செய்திருந்தனர். சிறை வளாகத்தின் உள்ளேயே திறந்த வளாகத்தில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொழுகைக்கான முன்னேற்பாடாக அனைவரும் ஒரே இடத்தில் கூடியதை பயன்படுத்தி சிலர் சிறை காவலர்களை சூழ்ந்து தாக்க ஆரம்பித்தனர்.

இந்த களேபரத்தை பயன்படுத்தி 20க்கும் மேற்பட்ட சிறைவாசிகள், சிறைக்கு வெளியே காத்திருந்தவர்கள் உதவியுடன், சிறை வளாகத்தின் அரண் மீதேறி தப்ப முயற்சித்தனர். அவர்களை தடுக்கும் நோக்கத்தில் கண்காணிப்பு பணியிலிருந்த போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சிறைவாசி ஒருவர் பலியானார்.

இறுதியாக 17 சிறைவாசிகள் தப்பிச் சென்றதை சிறை கண்காணிப்பாளர் உறுதி செய்துள்ளார். தப்பிச்சென்ற அனைவரும் பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளின் கீழ் கைதானவர்கள். சாமன் சிறை வளாகம் ஈரான் தேசத்தின் எல்லையில் இருப்பதால், சிறையிலிருந்து தப்பியவர்கள் எல்லை கடந்து ஈரானுக்குள் ஊடுருவியிருக்கலாம் என பாகிஸ்தான் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

அங்கு சென்றவர்கள், தங்களது கூட்டாளிகள் உதவியுடன் மீண்டும் பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத செயல்களை மேற்கொள்வார்கள் என்ற அச்சம் பாகிஸ்தானில் அதிகரித்துள்ளது. இதனிடையே, தர்பாத் நகரில் பெண் தற்கொலை குண்டு வெடித்த சம்பவத்தில் ஒரு போலீஸ் அதிகாரி குறிவைத்து கொல்லப்பட்டுள்ளார்.

x