குடும்ப வன்முறையால் தற்கொலைக்கு ஆளாகும் கணவர்களின் துயரம் தடுக்க, ’தேசிய ஆடவர் ஆணையம்’ கோரும் பொதுநல வழக்கினை உச்ச நீதிமன்றம் திங்களன்று விசாரிக்க இருக்கிறது.
2021-ம் ஆண்டின் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின்படி, ஓராண்டில் தற்கொலை செய்துகொண்டோரின் எண்ணிக்கை 1,64,033 ஆகும். இதில் மணமான ஆண்களின் எண்ணிக்கை 81,063; மணமான பெண்களின் எண்ணிக்கை 28,680. அதாவது திருமணமானவர்களில் பெண்களைவிட ஆண்களே அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கும் பொதுநல வழக்கொன்று, குடும்ப வன்முறைகளில் இருந்து கணவன்மார்களை காப்பாற்ற, ‘தேசிய ஆடவர் ஆணையம்’ அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு கோருகிறது. மேலும் குடும்ப வன்முறைகளால் துன்புறும் ஆண்களின் புகார்களை ஏற்குமாறும், தற்கொலை செய்துகொள்ளும் ஆண்கள் தொடர்பாக விசாரிக்க மனித உரிமைகள் ஆணையத்துக்கு உரிய வழிகாட்டுதல் வழங்குமாறும் உச்ச நீதிமன்றத்தை கோருகிறது.
மகளிருக்கு என தேசிய மகளிர் ஆணையம் இருப்பதுபோல, ஆடவர்களின் துயரம் துடைக்க தேசிய ஆடவர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்பது, குடும்ப வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்ட ஆண்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. ஆனால் இதனை அரசு செவிமெடுக்காது இருப்பதாகவும் ஆண்கள் தரப்பில் புலம்பி வருகிறார்கள். இதற்காக ’மனைவியால் பாதிக்கப்பட்டோர் சங்கம்’ உட்பட சமூக ஊடகங்களில் பல்வேறு குழுக்கள் அமைத்தும் போராடி வருகிறார்கள்.
தேசிய ஆடவர் ஆணையம் கோரும் பொதுநல வழக்கினை, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் திபான்கர் தத்தா உள்ளிட்டோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு திங்களன்று விசாரிக்க உள்ளது. இந்த வழக்கு விசாரணையின் இறுதியில் தேசிய ஆடவர் ஆணையம் வருமா என்பது உறுதியாகும்.