நெல்லை மாவட்டத்தில் அரிவாள் படத்துடன் சப்-இன்ஸ்பெக்டர் இல்லத்திற்கு தபாலில் வந்த கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக இருப்பவர் கார்த்திக். அவர் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார். தினமும் ஸ்டேஷனுக்குச் சென்றுவர வசதியாக இந்த வீட்டை அவர் வாடகைக்கு எடுத்துள்ளார். இந்நிலையில் அவர் வீட்டுக்கு அஞ்சலகம் வழியே தபால் ஒன்று வந்தது.
இன்லேண்ட் லெட்டரான அதை பிரித்துப் பார்த்த எஸ்.ஐ கார்த்திக் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த கடிதத்தில் அரிவாள் படம் ஒன்றைப் பெரிதாக வரைந்து, அதன் கீழ், " எங்ககிட்ட மோதாதே..செத்துருவ" என பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டு இருந்தது. ஆனால், அந்தக் கடிதத்தில் அனுப்புநர் முகவரி இல்லாமல் இருந்தது.
இதுகுறித்து சப் -இன்ஸ்பெக்டர் கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப் பதிவு செய்து, அந்த இன்லேண்ட் கடிதம் அனுப்பப்பட்ட பகுதியில் அஞ்சல் முத்திரையின் அடிப்படையில் அந்த சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ரவுடிப் பட்டியலில் இருப்போரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.