மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்: அரசு ஊழியர், குடும்பத்தினர் மீது பாய்ந்தது வழக்கு


வரதட்சணை கேட்டு கொடுமை

விருதுநகர் மாவட்டத்தில் மனைவியிடம் வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்திய அரசுப் பள்ளியின் இளநிலை உதவியாளர், அவரது பெற்றோர் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பானுப் பிரியா(25). இவருக்கும் எம்.புதுப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் இளநிலை உதவியாளராகப் பணிசெய்யும் சீனு என்பவருக்கும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தின் போது பெண் வீட்டார் சார்பில் 23 பவுன் நகைகள் மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் கொடுத்தனர்.

இந்தநிலையில் அரசு வேலைப் பார்க்கும் தன் மகனுக்கு இந்த வரதட்சணைத் தொகைப் போதாது. கூடுதல் தொகை மற்றும் நகை வேண்டும் என சீனுவின் பெற்றோர் செல்லத்துரையும், மகாராணியும் வரதட்சணைத் தொல்லைக் கொடுத்தனர். இதை சீனுவும் கண்டிக்கவில்லை. அவர் சம்மதத்துடனே வரதட்சணைக் கொடுமையும் நடந்தது. இதனால் மூவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி பானுப்பிரியா விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்தப் புகார் மனுவில், “வரதட்சணை கொடுமை மட்டுமல்லாது, தன் மாமனார் தன்னிடம் தவறான உள்நோக்கத்துடன் நடக்க முயல்கின்றார்” எனவும் புகார் கொடுத்து இருந்தார். அதன் பேரில் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர், குடும்பத்தினர் மீது வரதட்சணை வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

x