வழக்கறிஞர் உள்பட இருவரை வெட்டிக்கொன்ற ராணுவவீரர்: சொத்துப் பிரச்சினையால் வெறிச்செயல்


கொலை

சொத்துத் தகராறில் தென்காசியில் வழக்கறிஞர் உள்பட இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த நெட்டூர் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அசோக்(29) வழக்கறிஞராக இருந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரும், ராணுவ வீரருமான சுரேஷுக்கும்(27) இடையே சொத்துப் பிரச்சினை இருந்துவந்தது. இதுகுறித்து அசோக் கொடுத்த புகார் ஆலங்குளம் காவல் நிலையத்திலும், தென்காசி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில் சுரேஷ் ராணுவ வேலையில் விடுப்பு எடுத்துவிட்டு ஊருக்கு வந்தார். நேற்று இரவு ராணுவ வீரர் சுரேஷிற்கும், வழக்கறிஞர் அசோக்கிற்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் சுரேஷ், அசோக்கை அரிவாளால் வெட்டினார். தடுக்க முயன்ற அசோக்கின் பெரியப்பா துரைராஜிற்கும்(57) வெட்டு விழுந்தது. இருவரையும் வெட்டிய சுரேஷ் அங்கு இருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

இதில் வழக்கறிஞர் அசோக் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். துரைராஜ் அக்கம், பக்கத்தினர் மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். செல்லும் வழியிலேயே உயிர் இழந்தார். ராணுவ வீரர் சொத்துப் பிரச்சினையில் இரட்டைக் கொலை செய்த விவகாரம் தென்காசி மாவட்டத்தில் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

x