பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் ராவன் துப்பாக்கியால் சுடப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு அமேதியின் 'ஷத்திரியா' என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து அவருக்கு கொலைமிரட்டல் வந்தது போலீஸாரின் விசாரணையில் தற்போது தெரிய வந்துள்ளது.
பட்டியல் சமூகம் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களின் வளர்ச்சிக்காக போராடுவதற்காக சந்திரசேகர் ஆசாத் ராவன் மற்றும் வினய் ரத்தன் சிங் ஆகியோரால் பீம் ஆர்மி என்ற அமைப்பு 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆசாத்தின் அமைப்பு மேற்கு உத்தரப்பிரதேசத்தில் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகளுக்காக பல பள்ளிகளை நடத்தி வருகிறது.
பட்டியல் சமூக மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை பீர் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் நடத்தி வருகிறார். இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டம் தியோபந்த் நகரில், சந்திரசேகர் ஆசாத் நேற்று மாலை காரில் சென்றுள்ளார். அப்போது வேறு காரில் சென்ற மர்ம நபர்கள் ஆசாத் சென்ற காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பினர். இதில் லேசாக காயமடைந்த ஆசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சஹாரன்பூர் காவல் கண்காணிப்பாளர் விபின் தடா கூறுகையில், “சந்திரசேகர் ஆசாத் சென்ற கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் 2 முறை சுட்டுள்ளனர். இதில் ஒரு குண்டு அவர் மீது லேசாக உரசி உள்ளது. எனினும் அவர் நலமுடன் உள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றார்.
இந்த சம்பவம் குறித்து ஆசாத் போலீஸாரிடம் கூறும்போது, “என்னுடைய இளைய சகோதரர் உட்பட 5 பேர் காரில் சென்றோம். அப்போது துப்பாக்கியால் சுட்டது யார் என எனக்கு தெரியவில்லை. ஆனால், என்னுடன் வந்தவர்கள் அவர்களை அடையாளம் கண்டுள்ளனர். அந்த கார் சஹாரன்பூர் நோக்கிச் சென்றது” என்றார்.
இந்த நிலையில், சந்திரசேகர் ஆசாத் சுடப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு அமேதியின் 'ஷத்திரியா' என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து ஆசாத்திற்கு கொலைமிரட்டல் வந்தது தற்போது தெரிய வந்துள்ளது.
ஆசாத் சுடப்படுவதற்கு முன் அவருக்கு ஃபேஸ்புக்கில் கொலைமிரட்டல் விடுத்த நிலையில், ஆசாத் சுடப்பட்டபின் அதே ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு மிரட்டல் பதிவு வெளியிட்டப்பட்டு நீக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஃபேஸ்புக் பதிவுகளும் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஃபேஸ்புக் பதிவுகள் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.