பெண் பார்க்கச்சென்ற பெற்றோர்; பணிக்கு சென்ற போலீஸ்காரர்: வீட்டில் புகுந்து கொள்ளையர்கள் அட்டகாசம்


திருட்டு

திருநெல்வேலி அருகே பட்டப்பகலில் போலீஸ்காரர் வீட்டிலேயே புகுந்து மர்மநபர்கள் ஒரு லட்ச ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி அருகில் உள்ள வடக்கு பூலாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி(52) விவசாயி. இவர் தன் வீட்டில் மனைவி மற்றும் மகனுடன் வசிக்கிறார். இவரது மகன் காவல்துறையில் பணி செய்து வருகிறார். இவரது திருமணத்திற்காக முத்துப்பாண்டி ஒரு லட்சம் ரூபாய் சேர்த்து வைத்திருந்தார். நேற்று மாலை தன் மகன் வழக்கம்போல் காவல்துறை பணிக்கு சென்றுவிட்ட நிலையில், பக்கத்து ஊருக்கு பெண் பார்க்க தன் மனைவியோடு சென்றார் முத்துப்பாண்டி.

இந்தநிலையில் வீட்டின் பின்பக்கம் வழியாக வந்த மர்மநபர்கள் அங்கிருந்த சுவரை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். மேலும் வீட்டில் இருந்த ஒரு லட்ச ரூபாயையும் கொள்ளையடித்துச் சென்றனர். மாலையில் பெண் பார்க்கச் சென்றுவிட்டு இரவு வீட்டுக்குத் திரும்பிய முத்துப்பாண்டி வீட்டில் பொருள்கள் சிதறிக் கிடப்பதையும், பணம் மாயம் ஆகி இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

போலீஸ்காரர் வீட்டிலேயே நடந்த இந்த துணிகர திருட்டு குறித்து தேவர்குளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x