2000 நோட்டு ஒரு கோடி இருக்கு; மாற்றிக்கொடுத்தால் 10 லட்சம் தருகிறேன்: நாடகம் நடத்தி திருடிய நண்பர்கள் கைது!


2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதாக மோசடி

திண்டுக்கல் அருகே நடந்த 90 லட்சம் கொள்ளை சம்பவத்தில் திடீர் திருப்பமாக, நிதி நிறுவன உரிமையாளரிடம் நாடகம் நடத்தி கொள்ளையடித்த நண்பர்களை போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே கொண்டமநாயக்கனூரில் குத்தகை தோட்டம் உள்ளது. இவரது நண்பர் திருப்பூரை சேர்ந்த ஷாஜகானிடம், தன்னிடம் 2000 ரூபாய் நோட்டுகள் ஒரு கோடி உள்ளது. அதனை மாற்றி கொடுத்தால் கமிஷனாக 10 லட்சம் தருவதாக சக்திவேல் கூறியுள்ளார்.

இதை நம்பிய ஷாஜகான், கரூர் மண்மங்கலம் நிதி நிறுவன உரிமையாளர் சுரேஷிடம் இதனை கூறி பணம் கேட்டுள்ளார். இதற்கு கமிஷனாக 5 லட்சம் தருவதாகவும் ஷாஜகான் ஆசை காட்டியுள்ளார். இதனை நம்பி சுரேஷ் 90 லட்ச ரூபாயுடன், ஷாஜகான் மற்றும் அவரது நண்பர்கள் கரூர் குணசேகரன், நாமக்கல் ராஜசேகர் ஆகியோருடன் கொண்டமநாயக்கனூர் சென்றுள்ளனர்.

அங்கு காத்திருந்த சக்திவேல், பணத்துடன் வந்த இவர்களை கத்தியை காட்டி மிரட்டி கட்டி போட்டுவிட்டு 90 லட்சத்தை பறித்து சென்றனர். இது தொடர்பாக சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில் திடீர் திருப்பமாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

நிதி நிறுவன உரிமையாளரான சுரேஷிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்க, சக்திவேல், அவரது நண்பர்கள் ஷாஜகான்,குணசேகரன், ராஜசேகர் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து ரூபாய் நோட்டு மாற்றும் நாடகத்தை நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து ஷாஜகான் உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீஸார், தலைமறைவான சக்திவேல் மற்றும் அவரது நண்பரகளை தேடி வருகின்றனர்.

x