ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பத்து லட்சம் ரூபாய் பணத்தை இழந்த சங்கரன்கோவிலைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகில் உள்ள வடக்குப்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிராஜ். இவரது மகன் மாரிச்செல்வம்(25) தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக பணிசெய்து வந்தார். மாரிச்செல்வத்திற்கு அண்மைக்காலமாக ஆன்லைன் விளையாட்டுக்களின் மீது அதீத மோகம் ஏற்பட்டது. ஆன்லைன் ரம்மி விளையாடி வந்த மாரிச்செல்வம் பத்து லட்சம் ரூபாய் இழந்துள்ளார்.
தன் கைப்பணம் மட்டும் அல்லாது, நண்பர்கள், உறவினர்கள் என பலரிடமும் கடன் வாங்கியும் பணத்தை இழந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் தவித்துவந்த மாரிச்செல்வம் கடந்த இருமாதங்களாகவே வேலைக்கும் செல்லவில்லை. இந்த மன உளைச்சலிலேயே தவித்து வந்த மாரிச்செல்வம், வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் தெரிந்ததும் விரைந்து சென்ற சங்கரன்கோவில் தாலுகா போலீஸார் மாரிச்செல்வம் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.