திருமணம் இன்று நடக்க இருந்த நிலையில் மணப்பெண்ணின் தந்தை கொலை: வாலிபரின் வெறிச்செயலுக்கு காரணம் என்ன?


மணப்பெண்ணின் தந்தை கொலை

திருமணம் இன்று நடக்க இருந்த மணப்பெண்ணின் தந்தை கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அவரது மகளைத் தனக்குத் திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தன் நண்பர்களுடன் சேர்ந்து முன்னாள் காதலன் செய்த இந்த வெறிச்செயல் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள கல்லம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ(63). இவரது மகள் ஸ்ரீலெட்சுமி. இவரது அருகாமை வீட்டைச் சேர்ந்த ஜிஷ்ணு என்பவரும், ஸ்ரீலெட்சுமியும் நட்பாக பழகிவந்தனர். இந்நிலையில் ஜிஷ்ணு, ஸ்ரீலெட்சுமி மீது காதல் வயப்பட்டார். ஸ்ரீலெட்சுமியும் அவரைக் காதலித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் காதலன் ஜிஷ்ணு, ராஜூவிடமே நேரடியாகப் போய் அவரது மகள் ஸ்ரீலெட்சுமியை தனக்கு பெண் கேட்டார். ஆனால் அதற்கு ராஜூ சம்மதிக்கவில்லை. வேறு மாப்பிள்ளை பார்த்து இன்று திருமணம் நடத்த இருவீட்டாரும் ஏற்பாடு செய்திருந்தனர். இந்தத் திருமணத்திற்கு ஸ்ரீலெட்சுமியும் சம்மதம் தெரிவித்திருந்தார்.

இதனால் ஆத்திரத்தில் இருந்த ஜிஷ்ணு, இன்று அதிகாலையில் ஸ்ரீலெட்சுமி வீட்டுக்குத் தன் நண்பர்களுடன் சென்றார். "எனக்குக் கிடைக்காத நீ யாருடனோ வாழப் போகிறாயே?" என்றவாறே ஜிஷ்ணு தன் நண்பர்களுடன் சேர்ந்து ஸ்ரீலெட்சுமியையும், அவரது தந்தை ராஜூவையும் சரமாரியாகத் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த ராஜூ அங்கேயே மயங்கி விழுந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து ராஜூவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ராஜூ ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இக்கொலை தொடர்பாக ஜிஷ்ணு அவரது நண்பர்கள் உள்பட 4 பேரை கல்லம்பலம் போலீஸார் கைது செய்தனர். மணக்கோலத்தில் மகளைப் பார்க்க நினைத்த தந்தையை, மரணக் கோலத்தில் முன்னாள் காதலன் பார்க்க வைத்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x