குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நர்சிங் மாணவி பலாத்காரம்: உறவுக்கார வாலிபர் எஸ்கேப்!


நர்சிங் மாணவி பலாத்காரம்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவியை ஜூஸில் மயக்க மருந்து கலந்துகொடுத்து உறவினரே பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்நல்லூர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண் நாகர்கோவிலில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் தங்கிப் படித்து வந்தார். இவரது உறவுக்கார வாலிபர் சிவகுமார்(25). இவரது சகோதரியை குமரி மாவட்டம், மண்டைக்காடு பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

சிவகுமார் தன் சகோதரி வீட்டில் தங்கி இருந்து அதேபகுதியில் உள்ள ஒரு படகு கட்டும் தளத்தில் வேலைசெய்து வருகிறார். சிவகுமார் அடிக்கடி தன் உறவுக்கார இளம்பெண்ணையும் சந்தித்து வந்தார். இந்நிலையில் தன் தங்கையின் குழந்தைக்கு பிறந்தநாள் என பொய் சொல்லி சிவகுமார் அந்த இளம்பெண்ணை மண்டைக்காடு பகுதிக்கு அவர் அழைத்து வந்தார்.

அங்கு இளம்பெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரமும் செய்தார். இதையடுத்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவகுமார் மீது மாணவி புகார் கொடுத்தார்.

அதன்பேரில் சிவகுமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், தலைமறைவான அவரைத் தேடிவருகின்றனர். சிவகுமாருக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை பால்ராஜ் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x