பெண்ணுடன் ஏற்பட்ட தகாத உறவால் வீடு புகுந்து கார் ஓட்டுநர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆவடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பொத்தூர் செல்வகணபதி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(29). வாடகை கார் ஓட்டுநரான இவருக்கு எட்டு மாதங்களுக்கு முன்பு விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுரேஷ்குமார் இன்று காலை வேலைக்கு அவர் கிளம்பிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவர து வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள், சுரேஷ்குமாரை கத்தியால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.
தகவல் அறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீஸார், சுரேஷ்குமார் உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது விஜயலட்சுமியின் முதல் கணவரான நாசரேத் பேட்டையைச் சேர்ந்த சத்யா தனது அடியாட்கள் மூலம் சுரேஷ்குமாரை கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் சுரேஷ்குமார் கடந்த 2 மாதங்களுக்கு முன் பொத்தூர் செல்வகணபதி நகரில் விஜயலட்சுமியுடன் குடிபெயர்ந்துள்ளார். இந்த நிலையில், வீடு புகுந்து சுரேஷ்குமார் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் போது விஜயலட்சுமி கையிலும் வெட்டு விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆவடி காவல் இணை ஆணையர் விஜயகுமார், உதவி ஆணையர் அன்பழகன் ஆகியோர் கொலை நடந்த இடத்தில் விசாரணை நடத்தினர்.
இக்கொலை தொடர்பாக விஜயலட்சுமியின் முதல் கணவர் சத்யா உள்ளிட்ட அவரது கூட்டாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர். கார் ஓட்டுநர் வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.