மருமகள் தலையைத் துண்டித்து கொலை செய்த மாமனார் போலீஸில் சரண்: அதிரவைத்த ஆக்ரா சம்பவம்!


கொலை செய்யப்பட்ட பிரியங்கா சிங்.

குடும்பத் தகராறில் தனது மருமகளின் துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல் நிலையத்தில் மாமனார் சரணடைந்த சம்பவம் ஆக்ராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் , ஆக்ராவில் உள்ள மாலிக்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுவீர் சிங்(62). இவரது மகன் கௌரவ் சிங் கடந்த 2018-ம் ஆண்டு காவல் துறை பணியில் சேர்ந்தார். தற்போது அவர் ஃபரூகாபாத்தில் போலீஸ்காரராக பணிபுரிகிறார். அவரது மனைவி பிரியங்கா சிங்(28). எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமான இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. தனது மாமனார் ரகுவீர் வீட்டில் பிரியங்கா தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார். ரகுவீரின் மூத்த மகன் இறந்து போனதால் அவரது மனைவியும் அந்த வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், கிராவாலி காவல் நிலையத்திற்கு மருமகள் பிரியங்கா தலையுடன் ரத்தம் சொட்டச் சொட்ட மாமனார் ரகுவீர் சிங் வந்ததைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். தனது மருமகள் பிரியங்காவை வெட்டிக்கொலை செய்து விட்டதாக ரகுவீர் போலீஸில் சரணடைந்தார்.

இதையடுத்து போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, வீட்டில் மருமகளிடையே அடிக்கடி தகராறு நடந்தது தெரிய வந்தது. சம்பவநாளான நேற்று ரகுவீரின் இரண்டு மருமகள்கள் சண்டை போட்டுள்ளனர். அப்போது இந்த சண்டையை ரகுவீர் விலக்கி விட்டுள்ளார். அப்போது அவரை இளைய மருமகள் பிரியங்கா கீழே தள்ளி விட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரகுவீர், கோடாரியால் பிரியங்காவை தாக்கி கொலை செய்து தலையைத் துண்டித்து போலீஸில் சரணடைந்தது தெரிய வந்தது.

இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட பிரியங்காவின் குடும்பத்தினர் மறியலில் ஈடுபட்டனர். ரகுவீர், பிரியங்காவின் மாமியார் உள்ளிட்ட அனைத்து குற்றவாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அத்துடன் பிரியங்காவின் இரண்டு குழந்தைகளைப் பராமரிக்க அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். அவர்களை போலீஸார் சமாதானம் செய்தனர்.

இக்கொலை தொடர்பாக பிரியங்காவின் தந்தை அளித்த புகாரின் பேரில் ரகுவீர், அவரது மகன் கௌரவ் சிங் உள்பட ஐந்து பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரகுவீரை கைது செய்த போலீஸார். இந்த கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். குடும்பச் சண்டையில் மருமகளின் தலையை மாமனார் துண்டித்த சம்பவம் ஆக்ராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x