கடலூர் மாவட்டம் தாழங்குடாவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிரடியாக செயல்பட்ட கடலூர் போலீஸார் 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கடலூர் தாழங்குடாவைச் சேர்ந்த குண்டு உப்பளவாடி ஊராட்சி மன்றத் தலைவரான சாந்தியின் கணவர் மதியழகன் நேற்று காலை மஞ்சக்குப்பம் சண்முகம் சாலையில் நடந்து சென்றபோது ஆறு பேர் கொண்ட ஒரு கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பொதுமக்கள் முன்னிலையில் பரபரப்பான சாலையில் நடந்த இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலையில் கடலூர் போலீஸார் அதிரடியாக செயல்பட்டனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை பழிக்குப்பழியாக நடந்திருக்கலாம் என்பதை யூகித்த போலீஸார் அது தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தி அது தொடர்பானவர்களை கண்காணித்தனர்.
அத்துடன் கொலை நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தினர். இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் கொலையை செய்து விட்டு கத்தியை அங்கேயே வீசிவிட்டு இரு சக்கர வாகனங்களில் சென்றது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது. அவர்கள் எந்த வழியாக சென்றிருக்கக் கூடும் என்பதை வழியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் வழியாக கண்டறிந்த போலீஸார் விழுப்புரம் மாவட்ட எல்லை அருகே தப்பிச் செல்ல முயன்ற கொலையாளிகளை மடக்கினர்.
மேலும் இது தொடர்பாக குண்டு உப்பலவாடியைச் சேர்ந்த பெண் ஒருவர் உள்ளிட்ட சிலரையும் விசாரணை வளையத்தில் கொண்டு வந்தனர். கொலையை அவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதை உறுதி செய்தபின் அவர்கள் 11 பேரையும் உரிய விசாரணைக்கு பிறகு இன்று அதிகாலை நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்திய போலீஸார், நீதிபதியின் உத்தரவுப்படி அவர்களை கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட மேலும் ஒரு முக்கிய குற்றவாளி ஒருவரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.