திண்டுக்கல் கல்வி அதிகாரியின் போலி கையெழுத்திட்டு மேஜிக் ஷோ: வடமாநிலத்தினர் 5 பேர் கைது


திண்டுக்கல்லில் 5 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேஜிக் நிகழ்ச்சி நடத்த கல்வி அதிகாரியின் கையெழுத்தை போலியாகப் போட்ட 5 வட மாநிலத்தவர்களை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் - பழநி சாலையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் உள்ளது. இங்கு டெல்லியைச் சேர்ந்த ரோகித் ராய்(22), கமல்ராய்(22), மெகந்தர்ராய்(30), அஜய்ராய்(22), மேக்ராஜ்(60) ஆகிய 5 பேரும் சேர்ந்து திண்டுக்கல் மாவட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மேஜிக் ஷோ நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசுருதீனின் சுற்றறிக்கை ஒன்று அலுவலகத் தகவல் பலகையில் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் இருந்த அவரது கையெழுத்தைப் புகைப்படம் எடுத்து, மேஜிக் செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக போலி சுற்றறிக்கையை டெல்லியைச் சேர்ந்த குழுவினர் தயார் செய்தனர்.

அதைக் காண்பித்து திண்டுக்கல் மாவட்டத்தில் பல பள்ளிகளிலும் மேஜிக் ஷோ நடத்தி வந்தனர். இதுகுறித்து சில பள்ளி ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு மேஜிக் ஷோ நடத்தியதாக ரிப்போர்ட் அனுப்பினர். அப்போதுதான் முதன்மை கல்வி அலுவலருக்கு இதுதொடர்பில் நடந்த முறைகேடு தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசுருதீன் கொடுத்த புகாரின் பேரில், வட மாநிலத்தவர்கள் ஐந்து பேரையும் கைது செய்தனர்.

x