திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே 2 ஆயிரம் ரூபாயை மாற்றித் தந்தால் கமிஷன் தருவதாக கூறிய கும்பலை நம்பி நண்பர்கள் மூவர் 90 லட்ச ரூபாயைப் பறிகொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், ஆண்டாள் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே கொண்டம்மநாயக்கனூரில் 11 ஏக்கர் தோட்டம் உள்ளது. இவரது நெருங்கிய நண்பர் ஷாஜகான்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷாஜகானை சந்தித்த சக்திவேல், தன்னிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஒரு கோடி ரூபாய்க்கு உள்ளது என்றும், அதனை மாற்றிக் கொடுத்தால் கமிஷன் கொடுப்பதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து தனது நண்பர்களான குணசேகரன் மற்றும் ராஜசேகரிடமும் ஷாஜகான் கூறியுள்ளார். அவர்களும் இதற்கு உடன்பட்டதுடன், ஒரு கோடி ரூபாயை மாற்றிக் கொடுத்தால் கமிஷனாக 10 லட்சம் கேட்கும்படி கூறியுள்ளனர்.
இந்த டீலுக்கு ஒத்துக்கொண்ட சக்திவேல், தனது தோட்டத்திற்கு பணத்தை கொண்டு வந்தால் அங்கு வைத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களைத் தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய ஷாஜகான், குணசேகரன், ராஜசேகரன் ஆகிய மூவரும் ரூ.90 லட்சத்துடன் சக்திவேலுவின் தோட்டத்திற்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் தனது கூட்டாளிகள் சிலருடன் தோட்டத்தில் காத்திருந்த சக்திவேல், பணத்துடன் வந்த மூவரையும் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி கட்டிப்போட்டுவிட்டு, 90 லட்ச ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு அவர்கள் வந்த காரில் ஏறி தப்பிச்சென்றுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து எரியோடு காவல் நிலையத்தில் நண்பர்கள் மூவரும் புகார் கொடுத்த நிலையில், வேடசந்தூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் துர்க்காதேவி தலைமையில் தனிப்படை பணத்துடன் தலைமறைவானவர்களைத் தேடி வருகிறது. 10 லட்சத்திற்கு ஆசைப்பட்டு 90 லட்சத்தை மூவர், பறிகொடுத்த சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.