நகை வியாபாரியிடம் ரூ.14 லட்சத்தை சுருட்டிய தம்பதி; கணவர் கைது: மனைவிக்கு போலீஸ் வலைவீச்சு!


கைது செய்யப்பட்ட கணேசன்

வங்கியில் ஏலம் போக இருந்த நகையை மீட்க ரூ.14 லட்சம் கடன் வாங்கிய தம்பதியினர், கடன் கொடுத்தவரை ஏமாற்றிவிட்டு பணத்துடன் கம்பிநீட்டினர். இந்த நிலையில் கணவரை கைது செய்த போலீஸார், தலைமறைவான அவரது மனைவியைத் தேடி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜாதவ்சங்கர். இவர் கடந்த 20 ஆண்டுகளாக தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி சுப்பிரமணியன் வீதியில் வசித்து வருகிறார். வங்கியில் ஏலம் விடப்படும் நகைகளை ஏலத்தில் எடுத்து அதனை மறுவிற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டும் வருகிறார்.

இந்த நிலையில் கொண்டமநாயக்கன்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த சத்தியபிரியா மற்றும் அவரது கணவர் கணேசன் ஆகிய இருவரும், ஜாதவ்சங்கரை அணுகி, தனியார் வங்கியில் தங்களது 44 பவுன் நகை அடமானத்தில் உள்ளதாகவும், அந்த நகைகள் ஏலம் போக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் அந்த நகையை வங்கியில் இருந்து மீட்பதற்காக ரூ.14 லட்சம் கொடுத்தால், மீட்கப்பட்ட நகையை ஜாதவ்சங்கருக்கே கொடுப்பதாக கூறியுள்ளனர். இதனை நம்பிய ஜாதவ்சங்கர், அவர்கள் கேட்ட தொகையைக் கொடுத்துள்ளார். ஆனால், பணத்தை வாங்கிச் சென்றவர்கள் திரும்ப வரவே இல்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜாதவ்சங்கர் இதுகுறித்து ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் இறங்கிய போலீஸார் பணத்துடன் கம்பி நீட்டிய தம்பதியரில் கணவர் கணேசனை கைது செய்த நிலையில், தப்பியோடிய அவரது மனைவி சத்தியபிரியாவை தேடி வருகின்றனர்.

x