உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு கொலை, கொள்ளை உள்ளிட்ட 13 வழக்கில் போலீஸரால் தேடப்பட்டு வந்த பிரபல தாதா குஃப்ரான் என்கவுன்டரில் இன்று சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், பிரதாப்கர் மற்றும் பிற மாவட்டங்களில் நடைபெற்ற கொலை, கொலைமுயற்சி மற்றும் கொள்ளை உள்ளிட்ட 13 வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல தாதா குஃப்ரான், கௌசாம்பி மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக இன்று அதிகாலை தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த இடத்தை அதிரடிப்படை போலீஸார் சுற்றி வளைத்தனர். ஆனால், சரணடையாமல் குஃப்ரான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அதிரடிப்படை போலீஸார் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் குஃப்ரான் மீது குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவர் போலீஸாரால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி குஃப்ரான் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அவரைப் பிடித்துக் கொடுத்தால் 1.25 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று காவல் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் , அவர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.