திருச்சபை மோதல் தொடர்பாக திருநெல்வேலி திமுக எம்.பி ஞானதிரவியம், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக திமுக தலைமை 7 நாள்களுக்குள் விளக்கம் அளிக்கக் கோரியிருந்த நிலையில், அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை, பாளையங்கோட்டையில் சி.எஸ்.ஐ டயோசிசன் அலுவலகம் உள்ளது. இங்கு பர்னபாஸ் என்பவர் பிஷப்பாக உள்ளார். இவருக்கும் டயோசிசனின் செயலாளராக இருக்கக்கூடிய ஜெயசிங் என்பவருக்கும் தொடர்ந்து கருத்து மோதல் நிலவி வருகிறது. இதில் ஜெயசிங் தரப்புக்கு ஆதரவாக ஞானதிரவியம் செயல்பட்டு வந்தார். இதில் அவர் தன் எம்.பி பதவியைக் கொண்டு அத்துமீறியதாக பிஷப் பர்னபாஸ், சி.எஸ்.ஐ கட்டுப்பாட்டில் இயங்கும் ஜான் பள்ளியின் தாளாளர் பொறுப்பில் இருந்து எம்.பி ஞானதிரவியத்தை நீக்கினார்.
இதேபோல் திருச்சபையின் கல்வி நிலைக்குழு பொறுப்பில் இருந்தும் திமுக எம்.பி ஞானதிரவியத்தை நீக்கினார் பிஷப் பர்னபாஸ். இதுதொடர்பாக நேற்று பிஷப் அலுவலகத்தில் குவிந்த திமுக எம்.பி ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள், பிஷப் ஆதரவாளரான மதபோதகர் காட்வே நோபல் என்பவரை கொடூரமாகத் தாக்கி விரட்டினர். இந்த காட்சி வீடியோவாக வைரலானது. இதுதொடர்பாக தாக்கப்பட்ட போதகர் காட்வே நோபல், நெல்லை காவல் ஆணையர் ராஜேந்திரனிடம் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக திமுக எம்.பி ஞானதிரவியம், சி.எஸ்.ஐ பொறுப்பாளர் ஜெயசிங், ஆடிட்டர் மைக்கேல் உள்பட 33 பேர் மீது காயம், கொடுங்காயம் ஏற்படுத்துதல், கூட்டமாக சேர்ந்து தாக்குதல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
முன்னதாக திமுக தலைமை இதே விவகாரத்தில் ஞானதிரவியத்திடம் ஒருவார காலத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.