இஎம்ஐ செலுத்துவதற்காக ஆம்பூரில் பூட்டிய வீடுகளில் திருடிய மாமன் - மைத்துனர் கைது!


கைதான தினகரன் (இடது), மணிகண்டன் (வலது)

திருப்பத்தூர்: நிதி நிறுவனத்தில் மாதத் தவணையில் வாங்கிய லாரிக்காக இ.எம்.ஐ., செலுத்த பகல் நேரத்தில் பூட்டிய வீடுகளில் புகுந்து நகைகளை திருடிய ஆரணியைச் சேர்ந்த மாமன், மைத்துனரை ஆம்பூர் காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.22 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், இரண்டு லாரிகள், ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் இந்திரா நகர் 3-வது தெருவில் வசிப்பவர் சுரேஷ். இவரது மனைவியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் கடந்த ஜூலை 27-ம் தேதி பறித்து சென்றனர். ஆம்பூர் மாங்காதோப்பு 3-வது தெருவில் வசித்து வரும் முஸ்தபா என்பவரது வீட்டுக்குள் கடந்த 13-ம் தேதி புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த தங்கச் சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட நகைகளை திருடிச் சென்றனர். இது தொடர்பாக ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

அதேபோல், ஆம்பூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாதனூர் எம்.எம். நகரில் பள்ளி ஆசிரியை சஞ்சலாமணி என்பவரது வீட்டுக்குள் கடந்த ஜூலை 27-ம் புகுந்த மர்ம நபர்கள் தங்கச் சங்கிலி மற்றும் தங்க வளையல் உள்ளிட்ட நகைகளை திருடிச் சென்றனர். மேலும், ஆம்பூர் அருகே வெள்ளக்கல் கிராமத்தில் வசித்து வரும் சரோஜா என்பவரின் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் கடந்த ஆக.13-ம் தேதி பீரோவில் வைத்திருந்த தங்கச் சங்கிலி, கம்மல், மோதிரம், மூக்குத்தி உள்ளிட்ட நகைகளை திருடிச் சென்றனர். இதுதொடர்பாக ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

தனிப்படை அமைப்பு: இந்த வழக்குகள் தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா உத்தரவின்பேரில் ஆம்பூர் டிஎஸ்பி அறிவழகன் மேற்பார்வையில் ஆம்பூர் கிராமிய காவல் ஆய்வாளர் வெங்கடேசன், ஆம்பூர் நகர காவல் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையில், ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் மாராப்பட்டு கூட்டுச்சாலை சந்திப்பில் நேற்று (ஆக.23) வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பதிவெண் இல்லாத இருசசக்கர வாகனத்தில் வந்தவர்களை பிடித்து தனியாக விசாரித்தனர்.

அதில், அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள இரும்பேடு அடுத்த கொல்லைமேடு பகுதியை சேர்ந்த தினகரன் (38), அக்ராபாளையம் குளத்துமேடு பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (32) என்று தெரியவந்தது. இருவரும் ஆம்பூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வீடுகளில் புகுந்து தங்க நகைகள் திருடியதாக ஒப்புக்கொண்டனர். அவர்கள், ரூ.5.50 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் திருடிய நகைகளை விற்று கிடைத்த பணத்தில் ரூ.16 லட்சம் மதிப்பில் இரண்டு லாரிகள் வாங்கியுள்ளனர். மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான இருசக்கர வாகனத்தையும் வாங்கியுள்ளனர். ஆக மொத்தம் ரூ.22 லட்சம் மதிப்பிலான வாகனங்கள், தங்க நகைகளை அவர்களிடம் இருந்து இன்று (ஆக.24) போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சிக்கியது எப்படி விவரம்: இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘ஆரணி பகுதியில் மணிவண்ணன் லாரியில் கிளீனராக வேலை செய்துவந்துள்ளார். சொந்தமாக லாரி வாங்கி ஓட்ட வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் ஆசையாக இருந்துள்ளது. இதற்காக, சில ஆண்டுகளுக்கு முன்பு நிதி நிறுவனம் மூலம் மாதத் தவணை செலுத்தும் வகையில் பழைய லாரி ஒன்றை வாங்கியுள்ளார்.

அவரால் மாத தவணை செலுத்த முடியாததால் நிதி நிறுவன ஊழியர்கள் லாரியை பறிமுதல் செய்துவிட்டனர். மேலும், கடன் கழுத்தை நெரித்ததால் விரக்தி அடைந்தவர் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளார். திடீரென, தற்கொலையால் என்ன ஆகப்போகிறது என்று யோசித்தவர் மனம் மாறி வேறு எங்காவது வேலைக்கு செல்லலாம் என்று முயற்சி செய்துள்ளார்.

இ.எம்.ஐ கட்ட திருட்டு: ஆனால், அவரால் வேலை செய்ய முடியாத நிலையில் பூட்டிய வீடுகளில் சிறிய அளவில் திருட ஆரம்பித்துள்ளார். அந்த தங்க நகைகளை விற்றதில் அதிக பணம் கிடைத்ததால் அதே தொழிலை செய்யலாம் என்று யோசித்துள்ளார். மேலும், அவரது நீண்ட நாள் கனவான லாரி உரிமையாளராக வேண்டும் என்ற ஆசை மீண்டும் மணிவண்ணனுக்கு வந்துள்ளது. இதையடு்த்து, திருட்டு தொழிலில் கிடைத்த பணத்தை வைத்து மீண்டும் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி லாரி வாங்கியுள்ளார்.

அந்த கடனுக்கு மாதம் தவணை (இ.எம்.ஐ.,) செலுத்த மீண்டும் திருட ஆரம்பித்துள்ளார். ஒரு பக்கம் லாரியை வாங்கி ஓட்டினாலும் நேரம் கிடைக்கும் சமயத்தில் திருட்டு தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். கையில் பணம் புரண்டதால் மணிவண்ணனின் மனைவியின் சகோதரரான (மைத்துனர்) தினகரன் ‘எப்படி கையில் இவ்வளவு பணம் புரள்கிறது’ என்று கேட்டுள்ளார். அவருக்கு மட்டும் ரகசியத்தை கூறிய மணிவண்ணன் தனது திருட்டு தொழிலுக்கு கூட்டாளியாக மைத்துனரையும் சேர்த்துக்கொண்டார். இருவரும் பகல் நேரத்தில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு திருடி வந்துள்ளனர். அதில் கிடைத்த பணத்தில் மேலும் ஒரு லாரியை வாங்கியுள்ளனர்.

பகலில் பூட்டிய வீடுகளுக்கு குறி: மணிவண்ணன், தினகரன் இருவரும் ஏதாவது ஒரு ஊரை தேர்வு செய்து அந்த ஊருக்கு லாரியில் சென்றுள்ளனர். அந்த லாரியில் பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தை ஏற்றிச் சென்றுள்ளனர். முக்கிய சாலையோரத்தில் லாரியை நிறுத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் சுற்றுவட்டாரத்தில் பகல் நேரத்தில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டுள்ளனர். இருவரும் காக்கி நிற சட்டை அணிந்துகொண்டு வீடுகளில் மின்சார கணக்கெடுப்பு நடத்துவதுபோல் சென்று மின் மீட்டருக்கு அருகில் வீட்டின் சாவியை எடுத்து வீட்டுக்குள் சென்று நகைகளை திருடியுள்ளனர். திருட்டு வேலை முடிந்ததும் லாரியில் மீண்டும் இருசக்கர வாகனத்தை ஏற்றிக்கொண்டு ஊருக்கு சென்றுவிடுவார்கள்.

காட்டிக்கொடுத்த கைரேகை: ஆம்பூர் நகர மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் நடைபெற்ற திருட்டு சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அதில், அனைத்து வீடுகளிலும் பகல் நேரத்தில் சாவியை பயன்படுத்தி வீட்டை திறந்து நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும், மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் செல்வதை உறுதி செய்தனர். ஆனால், அவர்கள் நெடுஞ்சாலை பகுதிக்குச் சென்றதும் எங்கு சென்றார்கள் என்ற தடயம் இல்லாமல் இருந்தது.

இதற்கிடையில், ஆம்பூர் நகரில் திருட்டு நடைபெற்ற வீடு ஒன்றில் தடய அறிவியல் நிபுணர்கள் நடத்திய ஆய்வில் மர்ம நபரின் கைவிரல் ரேகை ஒன்று கிடைத்தது. அந்த ரேகையை வைத்து ஏற்கெனவே திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் விரல் ரேகைகளுடன் ஓப்பீடு செய்தனர். அதில், ஏற்கெனவே ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பகுதியில் திருட்டு வழக்கில் கைதான மணிவண்ணனின் கைரேகையுடன் ஒத்துப்போனது. இதையடுத்து, அவர் குறித்து விசாரித்து வந்த நிலையில் மீண்டும் ஆம்பூர் பகுதியில் திருட வந்த போது இருவரும் சிக்கியுள்ளனர். இவர்கள் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மட்டுமில்லாமல் அரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

x