’சித்து மூஸ் வாலா போன்றே, பாலிவுட் நடிகர் சல்மான் கானையும் விரைவில் கொல்வோம்’ என்று கனடாவில் இருந்தபடியே கறுவி இருக்கிறார் கேங்ஸ்டர் கோல்டி பிரார்.
பஞ்சாபிய பாடகரும், இளம் அரசியல்வாதியுமான 28 வயதான சித்து மூஸ் வாலா, கடந்தாண்டு மே 20 அன்று கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த படுகொலையின் பின்னணியில் கனடாவில் இருந்தபடி இயங்கும் கோல்டி பிரார் தலைமையிலான கும்பல் சந்தேகிக்கப்பட்டது. அதனை தற்போது உறுதி செய்திருக்கிறார் கோல்டி பிரார்.
கனடாவில் இருந்தபடியே பஞ்சாப்பில் கேங்ஸ்டர் கும்பலை இயக்கி வரும் கோல்டி பிரார், ’அடுத்த குறி சல்மான் கானுக்கு. விரைவில் அவரை திட்டமிட்டு கொல்வோம்’ என அறிவித்திருக்கிறார்.
சல்மான் கானுக்கு எழுந்த மிரட்டல்களை அடுத்து அவருக்கு உச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும், கோல்டி பிராரின் பகிரங்க மிரட்டல் பாலிவுட்டில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ”சல்மான் கானை கொல்வதான முடிவில் உறுதியாக இருக்கிறோம். எத்தனை தடைகள் வந்தாலும், நாட்கள் கழிந்தாலும், இதிலிருந்து பின்வாங்க மாட்டோம்” என்று தனது பதிவை முடித்திருக்கிறார் கோல்டி பிரார்.
கனடாவில் பதுங்கியிருப்பதாக சொல்லப்படும் கோல்டி பிராரின் இருப்பிடம் இதுவரை ரகசியமாகவே உள்ளது. இந்த வருடம் மே மாதம் கனடா அரசு வெளியிட்ட, தேசத்தின் தேடப்படும் முக்கிய 25 கிரிமினல்களின் பட்டியலில் கோல்டி பிரார் பெயர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.