சென்னையில் தீபாவளிச் சீட்டு 3 ஆயிரம் பேரிடம் 5 கோடி ரூபாய் வசூலித்து விட்டு தலைமறைவானவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை, பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (45). இவர் அதே பகுதியில் சொந்தமாக மளிகைக்கடை நடத்தி வந்தார். இவர் நேற்று வானகரம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற போது, அவ்வழியே வந்த லாரி மோதி கீழே விழுந்தார். இதில் கணேசன் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து அங்கு வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார், கணேசன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய பூந்தமல்லியை சேர்ந்த லாரி ஓட்டுநர் செல்வராஜ் என்பவரை போக்குவரத்து போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த கணேசன், சைதாப்பேட்டையில் தீபாவளிச் சீட்டு நடத்தி முதிர்வு தொகையைக் கொடுக்காமல் கடந்த சில தினங்களாக தலைமறைவாக இருந்து வருவது தெரியவந்தது. மேலும் தீபாவளிச் சீட்டு கட்டி ஏமாந்த பாதிக்கப்பட்ட நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த கணேசன் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் இருந்து சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல் பணம் வசூலித்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளாக தீபாவளிச் சீட்டு முறையாக நடத்தி வந்த கணேசன், வசூலித்த பணத்தை வேறு தொழிலில் முதலீடு செய்தால் நஷ்டம் ஏற்பட்டதாகவும் அதனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு முன் முதிர்வுத் தொகையை கொடுக்காமல் தலைமறைவான நிலையில் அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கணேசன் சாலை விபத்தில் உயிரிழந்ததை அறிந்து அவரிடம் பணம் கட்டி ஏமாந்தவர்கள் அவரது வீடு மற்றும் சைதாப்பேட்டை காவல் நிலையம் முன்பும் ஓன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீபாவளிச் சீட்டு மோசடியில் சிக்கி தலைமறைவான மளிகைக் கடைக்காரர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.