ராய்காட்டில் உள்ள எம்ஐடிசி தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் உள்ள மஹாத் எம்ஐடிசி (மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சி கழகம்) பகுதியில் ப்ளூ ஜெட் ஹெல்த்கேர் நிறுவன தொழிற்சாலை உள்ளது.
இங்கு இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தீ மளமளவென பிடித்து எரிந்தது. அப்போது, சிலிண்டர்கள் வெடித்து சிதறின. இந்த சத்தம் பல கி.மீ தூரத்திற்கு கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த மஹாத் எம்ஐடிசி மற்றும் பிற இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்தன.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீப்பிடித்த நிறுவனத்தில் எரிவாயு கசிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் 4 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர். மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சுமார் 15 தொழிலாளர்கள் இன்னும் தொழிற்சாலையின் உள்ளே சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...