வீட்டில் வெடித்து சிதறிய பொருட்கள்: ஹைவோல்ட் மின்சாரத்தால் 2 தச்சுத் தொழிலாளிகள் பலி!


மறியல் போராட்டம்.

திடீரென கூடிய மின்சாரம் பாய்ந்து தச்சு வேலையில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ராமேஸ்வரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பெரியபள்ளிவாசல் தெருவில் வசிப்பவர் முருகன். தச்சுத்தொழில் செய்து வரும் இவரது வீட்டில் அவரது மருமகன் நாகேந்திரன் என்பவரும், மதுரை சிலைமானைச் சேர்ந்த உறவினர் அஜீத்குமார் என்பவரும் தச்சுவேலை செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பிளைவுட் அறுக்கும் மிஷினைப் பயன்படுத்தி நாகேந்திரன் இன்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அதிக அளவு மின்சாரம் வரவே வீட்டில் இருந்த மின்சாதனப் பொருட்கள் வெடித்து சிதறியதுடன், நாகேந்திரன் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனைக் கண்டு பதறிப்போன அறிவழகன், நாகேந்திரனை காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து பலியானவர்களின் உறவினர்கள், அப்பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மின்சாரம் திடீர் திடீரென ஏற்றம் இறக்கத்துடன் வருவதாகவும், இது குறித்து அதிகாரிகளிடம் புகார் செய்தும் சீர் செய்யவில்லை. எனவே, இருவரின் உயிர் பறிபோக காரணமான மின்வாரியத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இதுகுறித்த தகவல் அறிந்த ராமேஸ்வரம் துறைமுக காவல் நிலைய போலீஸார், பலியான இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன், மறியலில் ஈடுபட்டவர்களைச் சமாதானப்படுத்தினர்.

மின்சாரம் தாக்கி பலியான நாகேந்திரனுக்கு கீர்த்திகா என்ற மனைவியும், 3 வயதில் பெண் குழந்தையும், 10 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். அஜித்குமாருக்கு திருமணமாகவில்லை. மின்சாரம் பாய்ந்து இரண்டு தச்சுத்தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x