காட்பாடி காவல் நிலையத்தில் கைவிலங்குடன் தப்பிய விசாரணைக் கைதி - கூட்டாளிகளுடன் கைது!


வேலூர்: காட்பாடி காவல்நிலையத்தில் இருந்து விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட கைதி, கைவிலங்குடன் தப்பிய நிலையில், அவரது கூட்டாளிகளுடன் சேர்த்து காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா, ரூ.1,600 ரொக்கப்பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு குளத்துக்கரை பகுதியைச் சேர்ந்தவர் காமேஷ் (20). பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவரை காட்பாடி காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் பரத், தலைமை காவலர் புகழேந்தி ஆகியோர் கஞ்சா வழக்கில் நேற்று முன்தினம் (ஆக.22-ம் தேதி) பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்துவதற்காக காவல் நிலையத்தில் கைவிலங்கிட்டு அமர வைத்திருந்தனர்.

அப்போது, காவல் நிலைய (பாரா) பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மணிகண்டன், அசந்த நேரத்தில் காமேஷ் கைவிலங்குடன் தப்பிச்சென்றார். அவரை பிடிக்க காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும், காவல் நிலையத்தில் இருந்து காமேஷ் தப்பிச் சென்றது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தேடினர்.

இந்நிலையில், காட்பாடி அடுத்த மூலக்கசம் பகுதியில் கைவிடப்பட்ட கட்டிடத்தில் கூட்டாளிகளுடன் பதுங்கி இருந்தவரை இன்று (ஆக.24) கைது செய்தனர். காமேஷ் மற்றும் கூட்டாளிகளான காட்பாடி கன்னிகோயில் தெருவை பகுதியைச் சேர்ந்த மாதவன் (19), அருண் (21), பள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்த தினேஷ் (19) ஆகியோரும் கைதாகினர். அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா, ரூ.1,600 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

x