வக்கீல் வீட்டை நோக்கி அடுத்தடுத்து வீசப்பட்ட முட்டைகள்: ஏரியாவை அதிரவைத்த பெண் கைது!


முட்டை வீசிய பெண் கைது

திருநெல்வேலியில் வீட்டைக் காலி செய்ய வைக்கும் நோக்கத்தில் வழக்கறிஞர் வீட்டிற்குள் தொடர்ந்து முட்டையை வீசிய பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியில் பாலாஜி அவென்யூ உள்ளது. இங்கு தங்கதுரை என்பவருக்குச் சொந்தமாக வீடு உள்ளது. அவர் இப்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் அவரது வீட்டை வழக்கறிஞர் பேச்சிமுத்து(33) என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

தங்கதுரைக்கும், அவரது சகோதரி சுரண்டை பகுதியைச் சேர்ந்த உமா மகேஸ்வரி(26) என்பவருக்கும் சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், உமா மகேஸ்வரி பாலாஜி அவென்யூவில் உள்ள வீட்டிற்கு வந்து அங்கு வாடகைக்கு இருக்கும் பேச்சிமுத்துவை காலி செய்யச் சொல்லி தகராறு செய்தார். மேலும் அந்த வீடு தனக்குச் சொந்தமானது எனவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேச்சிமுத்து, அந்த வீட்டிற்கு முறையாக வாடகைக் கொடுத்து வருவதாகவும், உங்களுக்கும், உங்கள் அண்ணனுக்கும் இடையேயான சொத்துத் தகராறில் என்னைத் தொந்தரவு செய்யக் கூடாது எனவும் சொன்னார். இதனால் ஆத்திரமடைந்த உமா மகேஸ்வரி, அடுத்த சில நிமிடங்களில் பேச்சிமுத்து வீட்டை நோக்கி வரிசையாக முட்டைகளை எறிந்துள்ளார். அவை வீட்டுக் கதவில்பட்டு அந்தப் பகுதியே அலங்கோலமானது. ஆனாலும் ஆத்திரம் தீராத உமா மகேஸ்வரி, அந்த வீட்டின் முன்பகுதியில் இருந்த மீட்டர் பாக்ஸ் கண்ணாடியையும் உடைத்தார்.

இதுகுறித்து அந்த வீட்டில் வாடகைக்கு இருக்கும் பேச்சிமுத்து கொடுத்த புகாரின்பேரில், தச்சநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய் து உமா மகேஸ்வரியைக் கைது செய்தனர். வழக்கறிஞர் வீட்டில் பெண் ஒருவர் சரமாரியாக முட்டைகளை வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x