வாங்கியதை விட அதிக பணம் கேட்கிறார்: ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு


வைத்தியலிங்கம்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஒரு நபர் திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் நாள் முகாம் நடைபெற்றது. ஏராளமானவர்கள் தங்கள் குறைகளை மனுவாக கொண்டு வந்து ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்துச் சென்றனர். இந்த நிலையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஒருவர் திடீரென தான் கொண்டு வந்திருந்த பாட்டிலை எடுத்து அதிலிருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்ள முயன்றார்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் உடனடியாக ஓடி வந்து அவரை தடுத்து அழைத்துச் சென்று அவர் உடலில் தண்ணீரை ஊற்றினர். அதனைத் தொடர்ந்து அவரிடம் நடைபெற்ற விசாரணையில் தற்கொலை செய்து கொள்ள முயன்ற அந்த நபர் கடையம் அருகே உள்ள ஆழ்வார்துளுக்கப்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த வைத்தியலிங்கம் என்பது தெரிய வந்தது.

அவர் ஆலங்குளத்தைச் சேர்ந்த வேலாயுதம் மகன் சுப்பிரமணியன் என்பவரிடம் 3500 ரூபாய் வாங்கியதாகவும், அதற்கு அதிகப்படியாக ரூபாய் கேட்டு சுப்பிரமணியன் தன்னை துன்புறுத்துவதாகவும் கூறிய அவர், அவரிடமிருந்து தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தீக்குளிக்க முயற்சி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை சமாதானப்படுத்தி தென்காசி காவல் நிலையத்திற்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

x