பெண்கள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த வங்கி ஊழியர்: அதிர வைத்த செல்போன் காட்சிகள்!


கைது செய்யப்பட்ட வங்கி ஊழியர் அசோக்

பெங்களூருவில் பெண்கள் தங்கும் விடுதியில் அவர்கள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு மகாதேவ்புரா பகுதியில் பெண்கள் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் பெண்கள் குளிப்பதை செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்த 25 வயது வாலிபரை பொதுமக்கள் கையும், களவுமாக பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் மகாதேவ்புரா பகுதி பெண்கள் விடுதிக்கு எதிரே உள்ள ஆண்கள் விடுதியில் தங்கியிருந்த அசோக்(25) என்பது தெரிய வந்தது.

விடுதியில் பெண்கள் குளிப்பதை வென்டிலேஷன் பகுதியில் துளையிட்டு அதன் வழியே செல்போனில் அசோக் வீடியோ எடுத்தது தெரிய வந்தது. அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்து போலீஸார் சோதனை செய்தனர். அப்போது 21 வயதுடைய பெண்கள் குளிக்கும் ஏழு வீடியோக்கள் அதில் பதிவு செய்யப்பட்டிருந்தைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நான்கு மாதங்களாக அசோக் அந்த வீடியோக்களைப் பதிவு செய்ததும் தெரிய வந்தது. அவர் மீது 354-சி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு போலீஸார் கைது செய்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில்," குற்றம் சாட்டப்பட்ட அசோக், தனியார் வங்கி ஒன்றில் கிரெடிட் கார்டு பிரிவில் பணிபுரிபவர். இவர் பெங்களூரு சிக்கபள்ளாப்பூர் தாலுகாவில் உள்ள பாகேபள்ளியைச் சேர்ந்தவர்" என்றும் கூறினர்.

அவர் ரகசியமாக படம்பிடித்த வீடியோக்களை வைத்து பெண்களை மிரட்டினாரா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x