உள்ளாட்சித் தேர்தலின் போது இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்து ஊராட்சித் தலைவருக்கு சொந்தமான வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம், பந்தல்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர்(48). இவரது மனைவி விஜயலெட்சுமி. இவர் கொப்புசித்தம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். இவர்கள் இருவரும் பந்தல்குடி பகுதியிலேயே வசித்து வருவதால் கொப்புசித்தம்பட்டியில் உள்ள அவர்களது பூர்வீக வீட்டில் அவர்களது உறவினரான பஞ்சவர்ணம் என்பவர் வாடகைக்கு இருந்து வருகிறார்.
இந்தநிலையில் பஞ்சவர்ணம் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்று இருந்த நேரம், ஒரு கும்பல் அந்த வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசியது. இதில் வீட்டுக் கதவின் மேல் பெட்ரோல் குண்டு மோதி, பயங்கர சத்தத்துடன் வெடித்தது. மேலும் கதவு, ஜன்னல் உள்ளிட்டவையும் எரிந்து நாசமானது. இதுகுறித்து ஜெய்சங்கர் அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், அதேபகுதியைச் சேர்ந்த தாமரைச் செல்வன் என்பவரே பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜயலெட்சுமியை எதிர்த்து தாமரைச் செல்வனின் மனைவி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அப்போது இருந்தே இருதரப்புக்கும் இடையில் முன்விரோதம் இருந்துவந்தது. அந்த முன்விரோதத்திலேயே தாமரைச்செல்வன் ஊராட்சிமன்ற தலைவருக்கு சொந்தமான வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதனிடையே போலீஸார் தன்னைத் தேடுவது தெரிந்து தாமரைச் செல்வன் தலைமறைவாகிவிட்டார்.