கட்டிட வரைபடத்துக்கு 6 ஆயிரம் லஞ்சம் தரணும்: கையும் களவுமாக சிக்கிய ஊராட்சிமன்ற தலைவர்


ஊராட்சிமன்ற தலைவர் கைது

விருதுநகர் மாவட்டத்தில் புதிய வீடு கட்ட கட்டிட வரைபட அனுமதிக்கு 6000 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சிமன்றத் தலைவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகில் உள்ள கீழராஜகுலராமன் பகுதியைச் சேர்ந்தவர் பொன்பாப்பா பாண்டி. இவருக்கு சொந்தமான காலி இடத்தில் புதிய வீடு கட்ட திட்டமிட்டார். இதற்காக கீழராஜ குலராமன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அனுமதி வேண்டி விண்ணப்பித்தார்.

உடனே ஊராட்சி மன்றத் தலைவர் காளிமுத்து கட்டிட வரைபட அனுமதி வழங்க 6000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். உடனே திங்கள் கிழமை தருவதாகச் சொன்ன பொன்பாப்பா பாண்டி இன்று காலை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்தார். முன்னதாக பொன்பாப்பா பாண்டி, இதுகுறித்து விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்து இருந்தார். அவர்கள் ரசானயப் பவுடர் தடவிய பணத்தாள்களை பொன்பாப்பா பாண்டியிடம் கொடுத்து அனுப்பி இருந்தனர்.

பொன்பாப்பா பாண்டி லஞ்ச பணத்தை கொடுத்ததும், ஊராட்சி மன்றத் தலைவர் காளிமுத்து பெற்றுக் கொண்டார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் காளிமுத்துவைக் கைது செய்தனர். லஞ்சம்வாங்கிய ஊராட்சிமன்றத் தலைவர் கையும், களவுமாகப் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

x