உத்தப்பிரதேசத்தில் நகை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் மனைவியைச் சுட்டுக்கொன்று விட்டு இளைஞர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், ஃபிரோசாபாத் மாவட்டத்தில் ஷிகோஹாபாத்தைச் சேர்ந்தவர் தீபக் யாதவ்(30). இவரது மனைவி சஷி26). இன்று அதிகாலை இவர்களது வீட்டில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. குடும்பத்தினர் ஓடிச் சென்று பார்த்த போது படுக்கை அறையில் சஷி துப்பாக்கியால் சுட்டப்பட்டு இறந்து கிடந்தார். அதற்கு அடுத்த அறையில் அவரது கணவர் தீபக் யாதவ் துப்பாக்கியால் தனக்குத்தானே சுட்டு இறந்து கிடந்தார்.
இதுகுறித்து உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸார், இரண்டு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நகைக்காக நடந்த மோதலில் தனது மனைவியைச் சுட்டுக்கொலை செய்து விட்டு தீபக் யாதவ், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து தீபக் யாதவின் சகோதரர் கோவிந்த யாதவ் கூறுகையில்," தீபக் ராணுவத்தில் சேர்வதற்காக தயாராகி க் கொண்டிருந்தார். நகைதொடர்பாக தீபக், சஷி ஆகியோர் இடையே நேற்று பலமுறை பிரச்சினை ஏற்பட்டது. அப்போது நான் தான் தலையிட்டு சண்டையை விலக்கி விட்டேன். இனி சண்டையிடமாட்டேன் என்று தீபக் உறுதியளித்தார். இன்று அதிகாலை துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்ட போது தான், தீபக் தன் மனைவியை சுட்டுக் கொன்று விட்டு அவர் தற்கொலை செய்தது தெரிய வந்தது" என்றார்.
மனைவியைச் சுட்டுக்கொன்று விட்டு கணவன் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.