அதிர்ச்சி: பேனா கத்தியால் குத்தி மனைவியைக் கொலை செய்த கணவன் கைது!


கைது செய்யப்பட்ட வெங்கடேசன்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே உள்ள ஆயபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (30). அதே செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே சிறுதாவூரை சேர்ந்தவர் அனிதா (28). இருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் ஒரு குழந்தை உள்ளது. வெங்கடேசன் திருப்போரூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி சென்ட்ரிங் மற்றும் கார்பெண்டர் வேலை செய்து வந்துள்ளார்.

வெங்கடேசனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. அதன் காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதுபோலவே கடந்த ஞாயிற்றுக்கிழமையும் வழக்கம் போல குடித்துவிட்டு சென்ற வெங்கடேசனுக்கும், மனைவி அனிதாவுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேசன் மனைவியைத் தாக்கியதோடு, தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியை எடுத்து கழுத்தில் குத்தியுள்ளார்.

அவரிடம் இருந்து தப்பிய அனிதா வீட்டைவிட்டு வெளியே ஓடியுள்ளார். அப்போது அதிகளவில் ரத்தம் வெளியேறியதன் காரணமாக வீட்டின் வெளியே சாலையில் மயங்கி விழுந்தார்.

கொலை செய்யப்பட்ட அனிதா

இதனைக் கண்ட வெங்கடேசன் அருகே இருந்தவர்கள் உதவியுடன் மனைவியை திருப்போரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் விசாரணை மேற்கொண்டதில், வெங்கடேசன் கழுத்தில் கத்தியால் குத்தியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து திருப்போரூர் போலீஸார், மருத்துவமனைக்குச் சென்று அனிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வெங்கடேசனை கைது செய்த போலீஸார், அவரிடம் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றனர். பின்னர், அவர் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் வாசிக்கலாமே...

x