தனது மனைவியுடன் தொடர்பு வைத்திருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தில் நண்பனின் கழுத்தை கத்தியால் அறுத்து ரத்தத்தைக் குடித்த வியாபாரியின் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகாவில் உள்ள பட்டலபள்ளியைச் சேர்ந்தவர் விஜய் (36). இவர் மனைவி மாலாவுடன் வசித்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்தவர் மாரேஷ் (34). நண்பர்களான விஜய்யும், மாரேஷும் ஆட்டோவில் கிராமம் கிராமமாகச் சென்று துணி வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஜய் வீட்டிற்கு மாரேஷ் அடிக்கடி சென்று வந்ததுடன், மாலாவுடன் நன்றாக சிரித்து பழகியுள்ளார். இதனால் தனது மனைவிக்கும், மாரேஷுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக விஜய் சந்தேகப்பட்டார்.
இதன் காரணமாக மாரேஷை கொலை செய்ய விஜய் திட்டமிட்டார். இதன்படி சரக்கு ஆட்டோவில் அவரது நண்பர், மாரேஷ் ஆகியோரை சித்தேப்பள்ளி அருகே ஆள் இல்லாத இடத்திற்கு விஜய் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு தனது மனைவி மாலாவுடனான தொடர்பை கைவிடுமாறு விஜய் கூறியுள்ளார். ஆனால், எங்களுக்குள் அப்படி எந்த தொடர்பும் இல்லை என மாரேஷ் மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த விஜய், மாரேஷை கீழே தள்ளி மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். இதனால் பீறிட்ட ரத்தத்தை விஜய் குடித்துள்ளார். இந்த காட்சியை அவருடன் சென்ற நண்பர் வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், தகவல் அறிந்த மாரேஷின் சகோதரர் , விரைந்து வந்து படுகாயமடைந்த நிலையில் கிடந்த தனது தம்பியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு மாரேஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 19-ம் தேதி நடந்த இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆட்டை அறுப்பது போல தனது நண்பனின் கழுத்தை அறுத்து ஒருவர் ரத்தம் குடிக்கும் வீடியோவைப் பார்த்து கர்நாடகா போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மாரேஷ் கொடுத்த புகாரின் பேரில் விஜய்யை போலீஸார் இன்று கைது செய்தனர். தனது மனைவியுடன் ஏற்பட்ட தகாத உறவால் மாரேஷை கொலை செய்ய முயன்றதாக விஜய் போலீஸில் கூறியுள்ளார்.
நண்பனைக் கொலை செய்ய ரத்தக்காட்டேரி போல மாறிய வியாபாரியின் நடவடிக்கை கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.