அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளரும், நகர செயலாளருமான ஆதி.மோகனுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆதி.மோகன் தலைவராக உள்ள கூட்டுறவு வங்கியில் 13.5 கோடி ரூபாய் முறையாக கணக்கு காட்டவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டு நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவு வங்கி மற்றும் வணிக வங்கி ஆகியவற்றில் ஆண்டு வருமானம் குறித்து எஸ்.எஃப்.டி எனப்படும் நிதி பரிவர்த்தனை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவற்றில் முறையாக கணக்கு காட்டாத நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென டெல்லி வருமானவரித்துறை தலைமை அலுவலகம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் வருமான வரித்துறை நுண்ணறிவு பிரிவினர் விசாரணை தொடங்கியுள்ளனர். குறிப்பாக பொதுமக்கள் முதலீடு செய்யும் நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனை அறிக்கையும், அதில் முதலீடு செய்யும் மக்களின் தனி நபர் வருமானவரி அறிக்கையும் ஒப்பிட்டு பார்த்து இந்த முறைகேட்டை வருமானவரித்துறை கண்டுபிடிக்கிறது.
முதற்கட்டமாக கடந்த வியாழக்கிழமை அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கியில் 12 மணி நேரம் வருமானவரித்துறை சோதனை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளரும், நகர செயலாளருமான ஆதி.மோகன் தலைவராக உள்ள கூட்டுறவு வங்கியில் சோதனை செய்தபோது பல கோடி ரூபாய் கணக்கு காட்டப்படாமல் இருந்தது தெரியவந்துள்ளது.
குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் கணக்குகளை ஆய்வு செய்த போது டைம் டெபாசிட்டில் 3.5 கோடி ரூபாயும், ரொக்க முதலீட்டில் 4.5 கோடியும், மக்களுக்கு கொடுத்த வட்டியில் 5.5 கோடி என மொத்தம் 13.5 கோடி கணக்கு காட்டவில்லை என்பதை வருமானவரித்துறை கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பாக ஆதி.மோகனுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று முறையாக கணக்கு காட்டாத கூட்டுறவு வங்கியில் பட்டியலை தயார் செய்து சோதனை நடத்த வருமானவரித்துறை புலனாய்வு பிரிவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.