5 நண்பர்களுடன் சேர்ந்து மனைவியிடம் தொடர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட கணவனுக்கு எதிராக புனே நீதிமன்றம் சாட்டையை சுழற்றி உள்ளது.
புனேவைச் சேர்ந்த 23 வயது பெண்ணின் தந்தை நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியதை அடுத்து, ’பாதிக்கப்பட்டோரின் புகாரை பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு’ காவல்துறைக்கு புனே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2017ல் திருமணம் நடந்ததில், அடுத்த சில வருடங்களிலேயே கணவன் கொடுமை தாங்காது, 17 வயது மனைவி தனது தாய் வீட்டுக்குத் திரும்பி விட்டார். தன்னிடம் இருப்பது போலவே தனது நண்பர்களிடம் இருக்க வேண்டும் என்று முரட்டுக் கணவன் வற்புறுத்தியே பிரச்சினைக்கு காரணம்.
பிரிந்து சென்ற மனைவியை தொடர்ந்து தொந்தரவு செய்த கணவன், 2020ல் தனது 5 நண்பர்களுடன் சேர்ந்து மாமனார் வீட்டில் தனியாக இருந்த மனைவியை கடத்திச் சென்றிருக்கிறார். மர்ம இடத்தில் அடைத்து, நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த கணவன், சகலத்தையும் வீடியோவில் பதிவு செய்திருக்கிறார். பின்னர் அந்த வீடியோவைக் காட்டி, அழைக்கும்போதெல்லாம் வரவேண்டும் என மனைவியை மிரட்டி இருக்கிறார்.
இப்படி சுமார் ஓராண்டுக்காலம் தொடர் அச்சுறுத்தலுக்கு ஆளான பெண் ஒரு கட்டத்தில் தந்தையிடம் அழுது புலம்பியிருக்கிறார். அவர்கள் இருவரும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றதில், கணவன் மற்றும் நண்பர்களின் அதிகார அழுத்தத்தால் போலீஸார் இழுத்தடித்தனர்.
எனவே, நீதிமன்றத்தில் சென்று முறையிட்ட பெண்ணின் தந்தைக்கு விடிவு பிறந்திருக்கிறது. நீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவல்நிலையத்தில் ஒருவழியாக வழக்கு பதிவு செய்தவர்கள், குற்றம்சாட்டப்பட்ட கணவன் மற்றும் 5 நண்பர்களைத் தேடி வருகின்றனர்.