தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கியில் 388 பவுன் போலி நகைகளை அடகுவைத்த வங்கியின் நகை மதிப்பீட்டாளரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் பகுதியில் மூக்குப்பீறி கூட்டுறவு நகரவங்கி உள்ளது. இந்தக் கூட்டுறவு வங்கியின் தலைவராக நாலுமாவடி ஊராட்சியின் முன்னாள் தலைவர் பிரபாகரன் உள்ளார். இங்கு ஜெயசிங் கிறிஸ்டோபர் என்பவர் மேலாளராகவும், குரும்பூர் அருளானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் நகை மதிப்பீட்டாளராகவும் உள்ளார்.
இந்த வங்கியில் கூட்டுறவு சங்கங்களின் கள அதிகாரிகள் தணிக்கையில் ஈடுபட்டனர். இங்கு வழங்கப்பட்ட 869 நகைக் கடன்களில், 36 கடன்களுக்கு 388 பவுன் போலி நகைகள் அடகு வைக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இந்தப் போலி நகைகளின் மூலம் ஒரு கோடியே 6 லட்சம் ரூபாய் கடன் பெற்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குநர் லதா, துணைப் பதிவாளர் சந்திரா, சார்பதிவாளர் பொன்செல்வி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது நகை மதிப்பீட்டாளர் ராஜசேகர், தன் நண்பர்கள் பெயரில் போலி நகைகளை அடகுவைத்து பணம் கையாடல் செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து ராஜசேகர் இந்தப் பணம் முழுவதையும் தான் கட்டிவிடுவதாகச் சொன்னார். இதில் 50 லட்சத்தை ராஜசேகர் ரொக்கமாகச் செலுத்தினார். இதேபோல் 49 லட்ச ரூபாய்க்கு காசோலை கொடுத்துள்ளார். எஞ்சிய பணத்தை எப்படி வசூலிப்பது என அதிகாரிகள் குழம்பி உள்ளனர்.
ராஜசேகர் மட்டுமல்லாது, இவ்விவகாரத்தில் ஊழியர்கள் வேறு சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவர தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்தபின்பு சட்ட ரீதியான நடவடிக்கையும், துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்.