தோழியை கடத்தி பாலியல் பலாத்காரம்: வேறு நபருடன் சென்றதால் இளைஞர் வெறிச்செயல்


பாலியல் பலாத்காரம்

தன் தோழியைக் கடத்திச் சென்று குடோனில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை கேரள போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் ஆற்றிங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கிரண்(25). இவரது பெண் தோழி, இன்னொரு ஆண் நண்பருடன் திருவனந்தபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சாப்பிடச் சென்று இருந்தார். இதுகுறித்து கிரணுக்கு தெரிய வந்ததும் அந்த உணவகத்திற்குச் சென்றார். அங்கு இருந்து தன் தோழியை வீட்டில் விடுவதாக பொய் சொல்லி அழைத்துச் சென்று தன் பைக்கிலேயே கடத்தினார்.

தொடர்ந்து அவரை களக்கூட்டம் பகுதியில் உள்ள குடோன் ஒன்றுக்கு அழைத்துப் போய் கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்தார். இந்தநிலையில் கிரண் வெளியில் சாப்பாடு வாங்கப் போயிருந்த நேரம் அரைகுறை ஆடையுடன் அந்தப் பெண் அங்கு இருந்து தப்பி ஓடினார். தொடர்ந்து அருகாமை வீடுகளில் போய் உதவி கேட்டார். அவர்கள் அந்த இளம்பெண்ணுக்கு ஆடை கொடுத்ததுடன், இதுகுறித்து காவலர்களுக்கும் தகவல் கொடுத்தனர். போலீஸார் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்திவிட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். அதேநேரத்தில் கிரணையும் கைது செய்தனர்.

தோழனாக பழகி இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

x